தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென் மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 3 சென்டி மீட்டர், வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவாலா,காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் சத்யபாமா பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், தரமணி, மகாபலிபுரம், சென்னை விமான நிலையம், சிவகங்கை, தேவக்கோட்டை, திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆகிய இடங்களில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.