மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக திரு செல்லத்துரை நியமிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து 14.6.2018 அன்று தீர்ப்பளித்திருக்கிறது. துணை வேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டி “தேடுதல் குழு” உறுப்பினராக இருந்த திரு ராமசாமி ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்தும்கூட, துணை வேந்தர் நியமனத்தின் போது முன்பிருந்த தமிழக ஆளுனர், துணை வேந்தராக திரு செல்லத்துரையை நியமித்தார் என்பதை சுட்டிக்காட்டுவது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர் மீது இருந்த முதல் தகவல் அறிக்கை கூட பிறகு அவசர அவசரமாக விசாரித்து முடிக்கப்பட்டு, அந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வினோதமும் அதிமுக ஆட்சியில் நிகழ்ந்தது.
இந்நிலையில் “துணை வேந்தரை நியமிக்கும் “தேடுதல் குழு” ராஜ்பவன் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் துணை வேந்தர் தேர்வை நடத்தியது. அந்த கலந்தாலோசனை 25 நிமிடம் மட்டுமே நடைபெற்றது. மூன்றில் இரண்டு தேடுதல் குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக தேடுதல் குழுவில் முறைப்படியான கலந்தாலோசனையின்றி, துணை வேந்தர் நியமிக்கப்பட்டதால் ரத்து செய்கிறோம்” என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அந்த துணை வேந்தரை நீக்காமல், இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அதிமுக அரசு வாய்ப்பளித்துள்ளது மிகவும் கண்டத்திற்குரியது.
உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் துணை வேந்தரை டிஸ்மிஸ் செய்யாமல் தற்போதுள்ள மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களும் மவுனம் காப்பது பல்வேறு அய்யப்பாடுகளுக்கு இடமளிப்பதாகப் பலரும் கருதுகிறார்கள்.
“துணை வேந்தர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்” என்று கல்வியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், நட்சத்திர ஹோட்டலில் 25 நிமிடம் மட்டும் கலந்து ஆலோசனை நடத்தி,ஒரு தேடுதல் குழு கொடுத்த பரிந்துரையை முன்பிருந்த தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டு திரு செல்லத்துரையை நியமனமும் செய்தது யாரும் எதிர்பாராதது மட்டுமல்ல- கல்வியாளர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது.
ஆகவே தற்போதுள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு செல்லதுரையை உடனே டிஸ்மிஸ் செய்து, இனி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிப்பதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவிடம் மீண்டும் திரு செல்லத்துரை விண்ணப்பம் அளித்தால் அதை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திரு செல்லத்துரையின் துணை வேந்தர் பதவி காலத்தில் நடைபெற்றுள்ள பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் முறையாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை உயர்கல்வித் துறைச் செயலாளர் உடனே அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.