திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிவந்த நிலையில், அதனை திமுக அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அண்ணாமலை முன்வைத்து வருவதாகவும், வாய்க்கு வந்தவையெல்லாம் உளறும் அரைவேக்காடு அண்ணாமலை என்றும் திமுக அமைச்சர்கள், கி.வீரமணி உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் குலமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 479 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வெளிப்படையாக சவால் ஒன்றை விடுத்தார். பத்திரபதிவுத்துறையில் மதுரையில் உள்ள ஒரு சார்பதிவாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரே நாளில் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்ததாக தன் மீது வைத்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்தார். ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவலை அண்ணாமலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் என்றும், பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார் பதிவாளர் திண்டுக்கல்லில் 25 நாட்கள் பணியாற்றிய பிறகே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் விளக்கம் அளித்தார்.
தேவைப்பட்டால் எந்த அதிகாரியையும் எப்போது வேண்டுமானாலும் பணியிடமாறுதல் செய்யும் உரிமையும், அதனை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு என்றும் அவர் கூறினார். தன் மீது சுமத்திய குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும், அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்றும் அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்துள்ளார். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் பத்திரப்பதிவு துறையின் நிர்வாகம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
போலி பத்திரங்களை பதிவாளர்கள் ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவை 7 மாதங்களாக குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக கூறிய அமைச்சர் மூர்த்தி, தமிழக அரசு கொண்டு வந்த அந்த முன்மாதிரி சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதனால் கடந்த அதிமுக ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான போலி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR