உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30 ஆம் தேதி என 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு முன் 48 மணி நேரம் (2 நாட்கள்) மது விற்பனையை நிறுத்தி வைப்பதற்காக முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரையும், 2-வது வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணி முதல் 30-ந் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜனவரி 2 ஆம் தேதியும் மதுபானக்கடைகள் மூடியிருக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச்செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.