தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதான சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தென் மேற்கு பருவமழையின் தாக்கம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோழிங்கரில் 4செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 3செ.மீ மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் காவேரிப்பாக்கம், தேனி மற்றும் திருத்தணி பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
தென் மேற்கு பருவமழை தற்போது வழுவடைந்து வருவதால் மேற்கு மற்றும் உள் தமிழக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும், கடலோர தமிழகத்தில் அதிகமாக இருக்கும். இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நமக்கு எந்த தாக்கமும் இல்லை.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு, வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ்- இல் இருந்து, குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.