கொடநாடு கொலை கொள்ளை வழக்குகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இதில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அனைத்து கோணங்களிலும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தொலைபேசி உரையாடல்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய குஜராத் தடய ஆய்வுக்குழுவினர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். அவர்கள் திருச்சியில் இருக்கும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ய இருக்கின்றனர்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும்: அண்ணாமலை
கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் அவர் மறைவுக்குப் பிறகு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. மர்மமான முறையில் சிலர் இறந்தனர். அவர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு அண்மையில் நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகி இருந்தனர். அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜின்குட்டி, திபு உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை பிப்ரவரி 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் செல்போன், வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்குள்ள ஆய்வகத்தில் இவர்களின் பேச்சுக்கள், உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அதில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் டி.எஸ்.பி.மாதவன் தலைமையிலான போலீசார் அகமதாபாத்திலேயே முகாமிட்டிருந்தனர்.
அடுத்தக்கட்டமாக, கொடநாடு வழக்கு தொடர்பான தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்வதற்காக குஜராத் மாநில தடய ஆய்வுக்குழு தமிழகம் வர இருக்கிறது. திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ய, ஜனவரி 25 ம் தேதிக்கு பிறகு அந்த குழு திருச்சி வர இருக்கிறது. இதனிடையே, வரும் 11ம் தேதி தன்னிடம் கொடநாடு வழக்கு குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறி சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30, 31 ஆம் தேதிகளில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் படிக்க | முரசொலி நில சர்ச்சை: வழக்கின் தீர்ப்பு தேதியை குறித்த சென்னை உயர்நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ