கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு கலைஞர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அன்று நள்ளிரவே காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் 24 மணி நேர டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
சில மணி நேரத்திற்கு முன்பு காவேரி மருத்துவமனை நான்காவது முறையாக அறிக்கை வெளியிட்டது. அதில், கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது கலைஞர் கருணாநிதியின் உடல் சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். அவர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த 26-ஆம் தேதி தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.