Kalaignar 100th Birthday: கல்லக்குடியிலிருந்து கல்லறைவரை; கருணாநிதியின் இடைவிடாத போராட்டம்!

Kalaignar 100th Birthday: கல்லக்குடியில் தொடர்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமூகப் போராட்டம் கல்லறைவரை தொடர்ந்தது.  நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அவர், இந்திய அரசியல் பிரமுகர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாவார்.  

Written by - Amarvannan R | Last Updated : Jun 3, 2023, 09:03 AM IST
  • கருணாநிதி தொடர்ந்து 13 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர்.
  • 5 முறை தமிழ்நாடு முதலமைச்சர்.
  • 'மாணவ நேசன்' என்ற மாத இதழை கையெழுத்து ஏடாக நடத்தினார்.
Kalaignar 100th Birthday: கல்லக்குடியிலிருந்து கல்லறைவரை; கருணாநிதியின் இடைவிடாத போராட்டம்! title=

Kalaignar 100th Birthday: திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924ஆம் ஆண்டு சூன் திங்கள் 3-ஆம் நாள் இவ்வுலகுக்கு அறிமுகமானார், கருணாநிதி. தந்தை முத்துவேலர். தாயார் அஞ்சுகம். இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.  கருணாநிதி என்று அழைக்கப்பட்டாலும் அவரது தொண்டர்களின் அன்பான அழைப்பில் கலைஞர் ஆனார்! ஆரம்பம்முதல் இறுதிவரை போராட்டம் ஒன்றே அவரின் வாழ்க்கையாகிவிட்டது. அவர் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு பள்ளியில் இடம்தர தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை.  அங்கேயே அமர்ந்து தலைமை ஆசிரியரை எதிர்த்துப் போராடி, அதில் வெற்றிகண்டு, அதே பள்ளியில் சேர்ந்தார். இதுவே அவரது போராட்டக் குணத்துக்கு அடிதளமிட்டது. பிற்காலத்தில் சமூகப் போராளியாக உருவெடுக்க உயிர்பித்தது. மாணவப் பருவத்திலேயே போராட்டக் களத்தைக் கண்ட அவர், படிக்கும் காலத்திலேயே 'மாணவ நேசன்' என்ற மாத இதழை கையெழுத்து ஏடாக நடத்தினார்.  அதுவே பின்னாளில் 'முரசொலி'ப்பதற்கு  அடித்தளமாக அமைந்தது. அவருடைய வலிமைமிக்க எழுத்தாற்றலே 'பராசக்தி' திரைப்படத்தின் வசனகர்த்தாவாக அவரை உயர்த்தியது.

சட்டமன்ற வைரவிழாவை கடந்த நாயகனான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்து 13 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர். 5 முறை தமிழ்நாடு முதலமைச்சர்.  எழுத்தாளர், நாடக நடிகர், கதாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர், பத்திரிகையாளர்,  நகைச்சுவையாளர் என பன்முகத்தன்மை கொண்ட அவர், சமூக நீதிக்காக தனது 13 வயதிலேயே தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.  அதுமட்டுமின்றி ; நீதிகட்சியின் முதுகெலும்பாக திகழ்ந்த அழகிரிசாமியின் அறிவார்ந்த பேச்சும் அவரை அரசியலுக்கு அழைத்துவந்தது.  இளமைப் பருவத்திலேயே பேரறிஞர் அண்ணாவோடு இணைந்து போராட்ட களத்தில் இறங்கினார்.  1953ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்றது. அப்போராட்டத்தில் அன்றைய ஒன்றிய அரசின் அடக்குமுறையால் இரண்டு உயிர்களை இழக்க நேரிட்டது.  அதனால் வெகுண்டெழுந்த கருணாநிதி, அப்போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.  அடக்குமுறைக்கு அஞ்சாத அவரது போராட்டக் குணமே அவரை அரசியல் உலகுக்கு அறிமுகப்படுத்தியது ; அடையாளப்படுத்தியது.

மேலும் படிக்க | மேகதாது விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சருக்கு வாய்க்கொழுப்பு - செல்லூர் ராஜ் விளாசல்

மேலும் 1957, 1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது ; அளவிற்கரியது! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர பிரகடன நிலையை 'மிசா' வை மிரட்சி இல்லாமல் எதிர்கொண்டார்.  தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்படும் என்று தெரிந்தும்கூட  அவசர பிரகடன நிலையை எதிர்த்து குரல் கொடுத்தார்.  ஆட்சியும் கலைக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட இன்னல்கள் பலவற்றையும் இன்பமாக்கிக் கொண்டார். அதிகார வர்க்கத்தினரின் சூழ்ச்சியால் இரண்டுமுறை தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்தார். அதேவேளையில், அநீதிக்கு அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவே திகழ்ந்தார். அதுவே அவரது அரசியல் ஆளுமைக்கு அடித்தளமிட்டது. அதனால் பிற்காலத்தில் இந்திய அரசியல் உலகில் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்தார்.  அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான முன்னேற்றம், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை -  வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சத்துணவு திட்டத்தில் விரிவாக்கம், சமத்துவபுரம் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்கள் சட்டப்பேரவையில் அரங்கேறின. இந்த சமூகப் போராளியின் சமத்துவத்தை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் பட்டியல் நீளும்!

karunanidhi

குறிப்பாக சொல்வதென்றால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை தனது குருவாக ஏற்றுக்கொண்ட கருணாநிதி, உயர் சாதியிலுள்ள ஒரு பிரிவினர் வேதங்களைக் அடிப்படையாகக்கொண்டு கடைப்பிடித்த சாதியின் அடிப்படையிலான ஏற்ற-தாழ்வை நீக்கி, சமத்துவத்தை நிலைநாட்ட  மூர்க்கமாக போராடி அதில் வெற்றியும் கண்டார். அவருக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றினார்.  அதன்மூலம் பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார். வர்ணாஸ்ரம கொள்கையான உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டை மட்டுமே வெறுத்தார் ; ஒருபோதும் அவற்றைக் கடைப்பிடித்தவர்களை வெறுக்கவில்லை ; வெறுத்ததும் இல்லை.  உதாரணத்திற்கு சமத்துவபுரம் தொகுப்பு வீடுகளில் உயர் சாதியினருக்கான வீட்டு ஒதுக்கீட்டையும் முறையாகக் கையாண்டார்.  ஆரம்பகாலம் முதல் இன்றுவரை மேற்கொண்ட கருணாநிதியின் அரசியல் பயணத்தில், மத்தியில் அதிகாரத்திலிருந்தவர்கள் கொடுத்துவந்த அத்தனை தொல்லைகளையும் இன்முகத்தோடு சகித்துக்கொண்டார் ; இறுதி மூச்சு உள்ளவரையிலும் அவற்றைத் தவறாமல் கடைபிடித்தார். ஆகையால்தான், சமூகபோராளியான  அவருக்கு அனைத்தும் சாத்தியமாயிற்று.

மேலும் படிக்க | பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

இது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இயற்கை கொடுத்த பெருங்கொடையாகும் ; வேறுயாருக்கும் கிட்டிடாத அருங்கொடையாகும்!!!போராட்டத்தையே தனது  வாழ்க்கையாக்கிக் கொண்ட அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராகயிருந்த பேரறிஞர் அண்ணா 1969ல் மறைந்த பிறகு தி.மு.கழகத்தைக் கட்டிக்காக்கும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் 50ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க. வின் தலைவராக இருந்தார். அவரது தொடர் அரசியல் பயணத்தால் சட்டமன்ற வைரவிழா நாயகனானார். இது உலக அரசியலில் யாருக்கும் கிட்டிடாத ஒன்று.  மாநில உரிமைக்கு வித்திட்ட அவர், இந்திய விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றுவதற்கான உரிமையைப் பெற்றுத்தந்தார். அதன்மூலம் பிற மாநில முதலமைச்சர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இந்திய அரசியலில் தனித்துவம் பெற்றதோடு, உலக அரசியலில் அவர் ஒரு முன்னோடியாக வலம் வந்தார். அரசு வேலைவாய்ப்பில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படும் வகையில் இடஒதுக்கிட்டை  நடைமுறைப்படுத்தினார். 

50 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும் 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 18 விழுக்காடு தாழ்த்தப்பட்டோருக்கும் 3 விழுக்காடு அருந்ததியருக்கும் 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும் ஒரு விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் சலுகை கிடைக்க வழிசெய்தார்.  அதன்பயனாக அனைத்து சாதியினரும் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் அமரும் வாய்ப்பைப் பெற்றனர்.  ஏனெனில், இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதற்கு முன்னால், அரசின் உயர் பதவிகளை உயர் சாதியினரே ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி என்றால் அது மிகையாகாது! ஒரு காலத்தில் இந்திய குடிமைப் பணியான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர்பதவிகளில் அமர்வது என்பது உயர் பிரிவனரைத் தவிர்த்து,  மற்றவர்களுக்கு அது எட்டாக் கனியாக இருந்தது. அக்கனிகளை அனைத்துப் பிரிவனரும் பறித்துக்கொள்வதற்கும் சுவைப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தவர்தான் இந்த சமூகப் போராளி!

அது மட்டுமின்றி ; நீதித்துறையில் பலரும் மிளிர்வதற்கு ஒளி தந்தவர். விமர்சனங்களைக்கண்டு அஞ்சாதவர். அவற்றை அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டவர். ஆயினும் தனிப்பட்ட முறையில்  அவரை தாக்கியவர்கள் தமிழக அரசியலில் பலருண்டு. அப்படிப்பட்டவர்களையும் விழா நிகழ்ச்சிகளில் கண்டால் இன்முகத்துடன் நலம் விசாரிப்பவர் கருணாநதி. அந்தளவுக்கு வியக்கவைக்கும் உயரிய பண்பை அதிகம் பெற்றவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத்தந்தவர்.  பெண்களுக்கு அரசுப் பணியில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க வழிசெய்தவர். கைம்பெண்களுக்கு (விதவை) மறுமண உதவித் திட்டங்களை அளித்தவர். சாதி மறுப்பு திருமணங்களை  ஆதரித்தவர். அவற்றை தன் குடும்பத்திலேயே நடைமுறைப்படுத்தியவர். இலவச மின்சாரம் மூலம் விவசாயிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். சென்னையில் வள்ளுவர் கோட்டம். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வான் புகழ்கொண்ட வள்ளுவருக்கு 133அடி உயரத்தில் சிலை அமைத்தவர். 1330 குறளுக்கும் எளிய நடையில் உரை எழுதியவர். அவரது எண்ணிலடங்கா சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆயிரமாயிரம் நூல்கள் தயாரித்தாலும் அவரின் சாதனைகள் அனைத்தும் அதில் அடங்காது என்பதே மறுக்கமுடியாத உண்மை..

மேலும் படிக்க | மேகதாது விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சருக்கு வாய்க்கொழுப்பு - செல்லூர் ராஜ் விளாசல்

அவரது அரசியல் பயணத்தில் நிறைகளும் உண்டு ; குறைகளும் உண்டு. அவற்றில் குறைகளைவிட நிறைகளே அதிகம்.  கல்லக்குடியில் தொடங்கிம அவரது போராட்டம் கல்லறையில் அடக்கமாகும்வரை தொடர்ந்தது. அவருக்கான இறுதிகால சட்டப் போராட்டமும் வெற்றிகண்டது.  2023 ஆம் ஆண்டு சூன் திங்கள் மூன்றாம் நாளான இன்று  முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.   மேலும் 2018 ஆகத்து ஏழாம் நாள் இயற்கை அவருக்கு ஓய்வளித்தது. ஆயினும், ஓய்வுக்கே ஓய்வுக்கொடுத்த ஓய்வறியா சமூகப் போராளி கருணாநிதியின் சமூகநீதிக்கான குரல் மட்டும் தமிழ் நாடெங்கும் ஓயாமல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. கருவறையில் தொடங்கி கல்லறையில் முடிவதல்ல ; அவரின்  சமூகத்தொண்டு!  ஏனேனில், கருணாநிதி ஒரு தொடர்கதையாவார்...!

எழுத்தாக்கம் : இரா. அமர்வண்ணன்

மேலும் படிக்க - அரசு உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News