INX Media Case: ப.சிதம்பரத்துக்கு மீண்டும் சிறை? அல்லது காவலா? நாளை தீர்ப்பு

சிதம்பரத்தின் கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கான தீர்ப்பை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு வழங்க உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2019, 07:17 PM IST
INX Media Case: ப.சிதம்பரத்துக்கு மீண்டும் சிறை? அல்லது காவலா? நாளை தீர்ப்பு title=

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், பி.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிப்பது தொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில், அமலாக்க இயக்குநரகம் (ED) பண மோசடி வழக்கில் பி.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தது. ஆனால் இதை பி.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் ஆட்சேபித்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரத்தை காவலில் எடுக்க அமலாக்கத்துறை கோர முடியாது என்று கூறினார். இன்றைய விசாரணை முடிந்ததும், ப. சிதம்பரத்தின் கைது மற்றும் காவலுக்கான தீர்ப்பை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நாளை வரை ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு தீர்ப்பை வழங்க உள்ளது.

இன்றைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் கபில் சிபல் வைத்த வாதம், ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரியது. இந்த கோரிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கபில் சிபல் கூறினார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவரை கைது செய்ய தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி தனது வாதத்தை முன்வைத்தார். சிபிஐயின் 15 நாள் காவலுக்குப் பிறகு, தற்போது அமலாக்கத்துறையின் காவல் தேவையில்லாதது என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறியது, சிபிஐ போட்ட எஃப்.ஐ.ஆர் (FIR) அடிப்படையில் தான் அமலாக்கத்துறை வழக்கு வழக்கு பதிவு செய்ததாக கபில் சிபல் கூறினார். பின்னர் ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க வேண்டிய தேவை என்ன? குற்றம் ஒன்றே. மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த வழக்கு தொடர்பான எதுவும் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை என்றும் பி.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை நீதிமன்றத்தில் வைத்தார்.

இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை, பணமோசடி என்பது ஒரு குற்றம் என்று கூறியது. ஒரு வழக்கின் விசாரணை மற்றொரு வழக்கில் இருந்து வேறுபட்டது. சிதம்பரம் சிபிஐ காவலில் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவரை கைது செய்வதற்கும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கும் அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு. ஏனென்றால் பணமோசடி என்பது பெரிய குற்றம். ப.சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் சரணடையத் தயாராக இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். இப்போது அவர் ஏன் காவலை எதிர்க்கிறார்? பணமோசடி வழக்கில், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க எங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்தது.

இருதரப்பு வாதங்களை கேட்ட ரூஸ் அவென்யூ நீதிமன்றம், சிதம்பரத்தின் கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கான தீர்ப்பை நாளை வரை ஒத்தி வைத்தது.

Trending News