'மோடியும் அம்பேத்கரும்' என பெயரிடப்பட்ட புத்தகம் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுத்தியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையையும் விவாதத்தையும் தூண்டிவிட்டது. அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவது தவறானது எனவும், முரணானது எனவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர். அதேசமயம் இளையராஜாவின் கருத்து முற்றிலும் சரியானது என அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை பகிர்ந்தனர்.
இதனிடையே இதுகுறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், ''மோடி - அம்பேத்கர் ஒப்பீடு விவகாரம் குறித்து இளையராஜாவிடம் பேசினேன். அப்போது இளையராஜா, ''இந்த விவகாரத்தில் நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். எனவே எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். என்னுடைய கருத்தை திரும்ப பெற மாட்டேன். என்னை பொருத்தவரை மோடி எப்படிப்பட்டவர் என்பதை தான் கூறி இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு பிடிக்கும் அவ்வளவு தான். என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்து எழுத சொன்னார்கள். நான் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதினேன். விமர்சனங்களுக்கு பதிலளிக்க தயார்'' என்று இளையராஜா தன்னிடம் கூறியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இசையமைப்பளர் இளையராஜா செய்த குற்றம் என்ன? இந்திய அரசியலமைப்பு சட்டம் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த அனைவருக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளது. அது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பொருந்தும். பட்டியலினத்தவர் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான மனநிலையை திமுக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!
இதேபோன்று இளையராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா?
அல்லது சிலருக்கு மட்டும் தானா?
தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே! இவ்வாறு தமிழிசை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யசபா எம்.பி. ஆக நியமிக்கப்படபோகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்கள் அவைக்கு 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பது வழக்கம். பொருளாதாரம், இலக்கியம், ஊடகம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்கள் இவ்வாறு நியமிக்கப்படுகின்றனர்.
பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியின் மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. பாஜகவுடன் உரசல் போக்கை கடைபிடித்து வருவதால் அவர் மீண்டும் எம்.பி. ஆக நியமிக்கப்படபோவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு பதிலாக இளையராஜாவுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ராஜா என்றும் இளையராஜா - களம் இறங்கிய தமிழ்நாடு பாஜக
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR