அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
பாலில் கலப்படம் செய்வதாக கடந்த மே 24-ம் தேதி தனியார் பால் நிறுவனங்கள் மீது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். மேலும் பால் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தீங்கு விளைவிக்கும் வகையில் தனியார் பாலில் எதும் கலக்கப்படவில்லை என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவதூறு பரப்பக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரமின்றி பேசக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது.