BJP NDA Vote Percentage In Tamil Nadu: பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 18வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 292 தொகுதிகளை தேசிய ஜனநாய கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகள் கிடைத்துள்ளன. எனவே, மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கவே வாய்ப்பிருக்கிறது. 100 தொகுதிகளை கூட இந்தியா கூட்டணி நெருங்காது என கணிப்புகள் இருந்த நிலையில், தற்போது 234 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.
தமிழ்நாடு அளவில் பார்த்தால் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் ஒரு தொகுதிகளை கூட கைப்பற்றவில்லை எனலாம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது பலத்த எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அவர்களின் பிரச்சாரம் கைக்கொடுக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
'எதிர்பார்ப்பை உயர்த்தியிருக்கிறோம்'
அதிலும், கோவையில் திமுக டெபாசிட் இழக்கும் என்றும் தமிழ்நாட்டில் பாஜக 20% வாக்குகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி 25% வாக்குகளையும் பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், நேற்றைய முடிவுகள் அதனை தலைகீழாக பிரதிபலித்தது. கோவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் திமுக வென்றுள்ளது. பாஜக 20% வாக்குகளை பெறவில்லை. ஆனால், இது பாஜகவுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
அதையேதான் சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதில் அவர் பேசியதாவது,"முன்னர் தமிழ்நாட்டில் பாஜகவை நோட்டாவுடன் ஒப்பிட்டு பேசினர். முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட பாஜக எங்கிருக்கிறது, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது என பேசியிருந்தார். ஆனால், நாங்கள் உங்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது. முதலில் 17% வாக்குகள் எங்கள் இலக்கு தொடர்ந்து 30% இலக்கு" என பேசியிருந்தார்.
முன்னேறும் பாஜக...
இதில் ஏறக்குறைய உண்மை இருக்கவே செய்கிறது. இதில் திமுகவின் வெற்றியை விட அதிமுகவின் தோல்வியை நாம் உற்றுபார்க்க வேண்டும். பாஜக தொடர்ந்து பல மாநிலங்களில் தங்களின் வாக்கு சதவீதத்தை உயர்த்து வருகிறது. கேரளாவில் நேற்று மக்களவையின் தங்களின் முதல் கணக்கையும் பாஜக தொடங்கியிருக்கிறது. தெலங்கானா, கர்நாடகா, ஆந்திராவிலும் கூட கூட்டணியில் பெரிய தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றுள்ளது. அப்படியிருக்க தமிழ்நாட்டிலும் பாஜக இப்போது அதன் வாக்கு சதவீதத்தை இந்த மக்களவை தேர்தலில் உயர்த்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக தனியே ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட்டது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகளாகும். பாஜக இம்முறை 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தியது. இந்த 23 வாக்காளர்களும் சேர்ந்து மொத்தம் 49 லட்சத்து 18 ஆயிரத்து 293 வாக்குகளை பெற்றுள்ளனர். தொடர்ந்து பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டு 18 லட்சத்து 79 ஆயிரத்து 689 வாக்குகளை பெற்றனர்.
பாஜக கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள்...
தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 401 வாக்குகளும், அமமுக 2 தொகுதிகளில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 415 வாக்குகளும், ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 882 வாக்குகளை என தேசிய ஜனநாயக கூட்டணி 79 லட்சத்து 44 ஆயிரத்து 680 வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வாக்குகளை வைத்து அடுத்த 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 50 தொகுதிகளை பாஜக குறிவைக்கும் எனலாம்.
வெற்றிகரமான தோல்வி
2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தாலும் கூட, 50 தொகுதிகளை கைப்பற்றினாலே அவர்களுக்கு அது ஏகோபித்த வெற்றியாக பார்க்கப்படும். அண்ணாமலை தொடர்ந்து களத்தில் செயலாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராக பார்க்கப்படுகிறார். வெறும் குற்றச்சாட்டுகள், சமூக வலைதள அரசியல் உள்ளிட்டவை மட்டும் பாஜகவை தமிழ்நாட்டில் வெற்றியை பெற்றுத் தராது என்பதையும் அண்ணாமலை புரிந்துகொண்டுள்ளார். மேலும், இந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட வெல்லவில்லை என்றாலும் பாஜகவுக்கு கூடுதல் மகிழ்ச்சியேதான் அளித்துள்ளது. அந்த வகையில்தான் இது வெற்றிகரமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.
பாஜக வெற்றிநடைபோடுகிறது...
ஒடிசாவில் பாஜக முதல்முறையாக தற்போது ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. தற்போது ஒடிசா தான் தமிழக பாஜகவுக்கு ஊக்கமளிக்கும் விஷயம் என்றும் அண்ணாமலை இன்று பேசியிருந்தார். அந்த வகையில் 11% வாக்குகளை மட்டுமே இம்முறை பெற்றிருந்தாலும், வருங்காலத்தில் அதிமுகவை ஓரங்கட்டி தமிழகத்தில் முன்னணிக்கு வரும் முனைப்பில் பாஜக வெற்றிநடைபோடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக, அதிமுகவும் சுதாரித்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்பதே திராவிட அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க | மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ