Farm Laws: தமிழக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியனின் கேள்வியும் - மத்திய வேளாண் அமைச்சர் தோமரின் பதிலும்

இன்று கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 5, 2021, 03:02 PM IST
  • வேளாண் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரத் தயார்: அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
  • போராடிக் கொண்டிருக்கும் இறந்து அல்லது நோய்வாய்ப்பட்ட விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? -தமிழச்சி தங்கபாண்டியன்
  • இறந்து போன விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு எதுவும் அளிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதா? தமிழச்சி தங்கபாண்டியன்
Farm Laws: தமிழக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியனின் கேள்வியும் - மத்திய வேளாண் அமைச்சர் தோமரின் பதிலும் title=

Farm Laws 2020: வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களா விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் போராட்டத்தை முடக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் விவசாயிகள் பின் வாங்கவும் இல்லை. போராட்டத்தை தொடந்து நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது இந்திய விவசாயிகளின் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. 

தற்போது விவசாயிகள் போராட்டம் (Farmers Protest) நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. இன்று கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar), வேளாண் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திமுகவை (DMK) சேர்ந்த தமிழக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் (Thamizhachi Thangapandian) வேளாண் சட்டம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்தார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் (Thamizhachi Thangapandian) பகிர்ந்துள்ளார்.

ALSO READ |  விவசாயிகளை வஞ்சிக்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி தாக்கு!

தனது பதிவில், "புதிய வேளாண் சட்டங்களை (Farm Laws 2020) எதிர்த்து விவசாயிகள் போராடி வருவது தொடர்பாக 02.02.2021 அன்று மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அளித்த பதிலும்.

மதிப்பிற்குரிய விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு தயவு செய்து பதில் அளிப்பாரா?

கேள்வியும் - பதிலும்:

தமிழச்சி தங்கபாண்டியன்: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக ஆயிரக் கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதுடன், அந்த சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று கோரி வருவதை அரசு அறியுமா?

நரேந்திர சிங் தோமர்:  புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து சில விவசாயிகளின் சங்கங்களும் அவற்றின் உறுப்பினர்களும் போராடிக் கொண்டு வருகின்றனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்: போராடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற விவசாயிகள் இறந்து போனதைப் பற்றியோ அல்லது நோய்வாய்ப்பட்டிருப்பதையோ, அரசு அறிந்திருக்கிறதா? ஆம் எனில், இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

நரேந்திர சிங் தோமர்: இத்தகைய விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டபோது, கடுங்குளிர் நிலவுவதன் காரணமாகவும், கோவிட் 19 தொற்று நோய் அச்சம் காரணமாகவும், மற்றும் இதர துன்பங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்று பலமுறை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ALSO READ |  விவசாயியை பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது: கனிமொழி!

தமிழச்சி தங்கபாண்டியன்: இப்போராட்டத்தின் போது இறந்து போன விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு எதுவும் அளிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதா? ஆம் எனில், அதன் விவரம்,

நரேந்திர சிங் தோமர்: அத்தகைய திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

தமிழச்சி தங்கபாண்டியன்: போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுடன் ஏதேனும் பேச்சு வார்த்தைகளை அரசு தொடங்கியிருக்கிறதா? ஆம் எனில், விவசாய சங்கங்களுடன் எத்தனை கூட்டங்கள், பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள அரசு தொடங்கியுள்ளது? அந்த சமரச முயற்சிகளினால் ஏற்பட்ட பயன்கள் என்ன?

விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் முக்கியமான கோரிக்கைகள் பற்றி விவரங்கள் என்ன?

பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டையைப் போக்குவதற்காக அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்குமா?

நரேந்திர சிங் தோமர்:  ஆம். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இதுவரை அரசுக்கும், போராடிக்கொண்டிருக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையேயான கூட்டங்களில் 11 சுற்று பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ALSO READ |  மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.30000 நிவாரணம் வழங்க வேண்டும்: MKS

அக்கூட்டங்களின் விவரங்கள் இணைப்பில் அளிக்கப் பட்டுள்ளன. வேளாண் சட்டங்களைத் திருத்துவதற்கான ஒன்றன் பின் ஒன்றாக பல திட்டங்களை அரசு முன் வைத்துள்ளது.

தமிழச்சி தங்கபாண்டியன்: அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வது அல்லது ரத்து செய்வது பற்றிய திட்டம் ஏதேனும் அரசுக்கு உள்ளதா? இல்லை எனில், அந்த சட்டங்களை ரத்து செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள் எவை?

நரேந்திர சிங் தோமர்: புதியதாக இயற்றப்பட்ட வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இப்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News