தமிழக முதல்வர் பொறுப்போடு செயல்படவேண்டும் - MK ஸ்டாலின்!

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தினை அதிமுக அரசு கண்டும் காணாமலும் இருப்பது கண்டனத்திற்குறியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Dec 30, 2018, 11:34 AM IST
தமிழக முதல்வர் பொறுப்போடு செயல்படவேண்டும் - MK ஸ்டாலின்! title=

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தினை அதிமுக அரசு கண்டும் காணாமலும் இருப்பது கண்டனத்திற்குறியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

 “கிராம நிர்வாக அலுவலர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்”, “கிராம நிர்வாக அலுவலகங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்” என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி கடந்த 28.11.2018 அன்றிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை அதிமுக அரசு கண்டும் காணாமலும் இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாவட்ட நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும், வருவாய்த் துறை நிர்வாகத்தின் அஸ்திவாரமாகவும் விளங்குபவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள். உள்ளாட்சியிலிருந்து தலைமைச் செயலகம் வரை நடைபெறும் அரசு நிர்வாகத்திற்கும், கஜா புயல் போன்ற பேரிடர் பாதிப்பு நேரங்களில் கணக்கெடுப்புப் பணிகளிலும் மிக முக்கியப் பங்காற்றும் அங்கமாகத் திகழ்பவர்கள். ஆனால் அந்த கிராம நிர்வாக அலுவலர்களை போராட வைத்துவிட்டு அரசு வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது. தற்போது கிராம நிர்வாக அலுவலர்களாக 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் இருப்பதால் கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வைக்கும் கோரிக்கை மிக மிக முக்கியமானது மட்டுமின்றி, மனித உரிமை தொடர்புடையது. பெண்கள் கண்ணியமாக அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்குக் கூட போராட வேண்டிய அவலநிலை அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய அவமானம்.

“தாசில்தார் அலுவலகங்கள் முன்பு இரவு நேரப் போராட்டம்” “மனித சங்கிலிப் போராட்டம்” “மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதப் போராட்டம்” “மக்களைத் தேடி” என்று மக்களையே சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் போராட்டம் என்று தொடர்ந்து நடத்தி வருகின்ற நிலையில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசாமல், ஆளுங்கட்சி நிர்வாகிகளை மட்டும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அதிகாரிகள் மத்தியில் ஒரு “பிரித்தாளும் சூழ்ச்சியை” வருவாய்த்துறை அமைச்சர் கடைப்பிடித்திருப்பது கண்டனத்திற்குரியது.

ஆளுங்கட்சிக்கு வேண்டிய கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மூலம், “போராட்டம் வாபஸ்” என்ற ஒரு போலியான அறிவிப்பை வெளியிட வைத்து விட்டால் பிரச்சினை முடிந்து விடும் என்று நினைப்பது, “பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டது” என்று எண்ணுவது போன்ற கற்பனை என்பதை வருவாய்த்துறை அமைச்சர் உணர வேண்டும்.

அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அமைச்சர்கள் திணறும் போது, முதலமைச்சராக இருப்பவர் உடனடியாகத் தலையிட்டு அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதுதான் பொறுப்புள்ள முதலமைச்சருக்கு அழகு. ஆனால் அதிமுக அமைச்சர்களுக்கும் சரி, அவர்களுக்கு முதலமைச்சராக இருப்பவருக்கும் சரி அது மாதிரி பொறுப்புணர்ச்சியோ, திறமையோ இல்லாமல் தடுமாறி தத்தளித்து நிற்கிறார்கள் என்பது வெட்கக் கேடாக இருக்கிறது. இதனால் கஜா புயல் பாதிப்பிற்குட்பட்ட மக்களுக்கான கணக்கெடுப்பும் மோசமான தாமதத்திற்குள்ளாகி, காவிரி டெல்டா பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆகவே தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக போராடி வரும் கிராம நிர்வாக அதிகாரிகளின் உணர்வுகளை அலைக்கழித்து, அருவருக்கத்தக்க செயலில் அதிமுக அரசு ஈடுபடாமல், உடனடியாக கிராம நிர்வாக அதிகாரிகளின் அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி தொடர் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். விரைவில் சுமூக தீர்வினை எட்டி, கஜா புயல் பாதிப்புகளால் கதறிக் கொண்டிருக்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் முழுமனதோடு, பொறுப்போடு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

Trending News