தமிழக அரசியலில் தேமுதிக குறித்து நிலவி வரும் பிரச்சனைக்கு முற்றிபுள்ளி வைக்கவும், கூட்டணி குறித்து தேமுதிகவின் நிலைப்பாடு குறித்தும் விளக்கம் அளிக்க இன்று தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இரண்டு கட்சிகளிடம் தேமுதிக பேசியது கூறப்படுவது முற்றிலும் தவறு.
துரைமுருகன் பேசியது வெட்கக்கேடானது. வயது மூப்பு காரணமாக துரைமுருகன் உளறிக் கொண்டிருக்கிறார். துரைமுருகன் இவ்வளவு மோசமாக அரசியல் செய்வார் என நான் நினைத்து பார்க்கவில்லை.
திமுக என்றாலே திருட்டு கட்சி என்று அப்போதே பதிவு செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்.. தேமுதிக-வை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது. கிழியாத சட்டையை கிழிச்ச மாதிரி காட்டி அரசியல் செய்வது நாங்கள் இல்லை. அதேபோல கேவலமாக நாங்க நடந்துகொள்ள மாட்டோம்.
இராணுவ கொள்கைகளை கொண்ட கட்சிதான் தேமுதிக. அதை யாராலும் சீர்குலைக்க முடியாது. எங்கள் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட எங்களுக்கு எந்தப்பயமும் இல்லை. கடந்த தேர்தலில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்று தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது. மக்களவை தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவேண்டும். அதற்க்கான பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது.
வீட்டில் மணப்பெண் இருந்தால் 10 பேர் பெண் கேட்கத்தான் செய்வர்கள். அதுபோல தான் தேர்தல் என்று வரும்போது எங்களை பலர் தொடர்புக் கொண்டனர். இன்னும் இரண்டு நாட்களில் தேமுதிக நிலைக்குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்த சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போது நீ எந்த டிவி? வா, போ என்று ஆவேசமாக பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.