சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்ட தேவையில்லை என்றும், அதேநேரத்தில் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் கருத்துக் கேட்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் பல போராட்டம் நடத்தி உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் உட்பட சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவினை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மக்களிடமும் கருத்துக் கேட்க வேண்டாம் என்ற உத்தரவை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி உள்ளார்.
அதேபோல செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.