தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
குமரிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழையும், 13 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிக பட்சமாக நேற்று செங்கத்தில் 100 மிமீ மழை பெய்துள்ளது. கரூர் 80 மிமீ, ஊத்தங்கரை, சாத்தனூர் அணை, வால்பாறை, கோபிசெட்டிப் பாளையம் 70 மிமீ, மன்னார்குடி, வெட்டிக்காடு 60 மிமீ, அண்ணா பல்கலைக் கழகம், மாரண்டஹள்ளி, நாகப்பட்டினம், பள்ளிப்பட்டு, திருத்துறைப்பூண்டி, பவானிசாகர், காரைக்கால், கன்னியாகுமரி 50 மிமீ மழை பெய்துள்ளது.
Also Read | சொகுசு காரில் மகளுடன் உலா வந்த Super Star: வைரலாகும் வீடியோ!!
இந்நிலையில், குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். இதுதவிர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பிற கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.
மேலும், சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கடலில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.