BSP Leader Armstrong Murder Latest News Update: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது அடையாளம் தெரியாத 8 பேர் கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மாநிலத்தின் தலைநகரில் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
தொடர்ந்து, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்தும், அவருக்கு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் தங்களின் கண்டனத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றன. ஆம்ஸ்ட்ராங்கின் கொலையை அடுத்து சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் மயாவதியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பதற்றமான சூழல்
பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையானது அரசியல் ரீதியாகவும், சட்ட ஒழுங்கு ரீதியாகவும் கடும் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வகையில், ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
The gruesome killing of Mr. K. Armstrong, Tamil Nadu state Bahujan Samaj Party (BSP) president, outside his Chennai house is highly deplorable and condemnable. An advocate by profession, he was known as a strong Dalit voice in the state. The state Govt. must punish the guilty.
— Mayawati (@Mayawati) July 5, 2024
டெலிவரி பணியாளர்கள் போல் வந்த கும்பல்
நேற்றிரவு (ஜூலை 5) சென்னை பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் அருகே வைத்து அவரை டெலிவரி பணியாளர்கள் போல் வந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. அப்போது ஆம்ஸ்ட்ராங் உடன் பேசிக்கொண்டிருந்த அவரின் நண்பர்கள் இருவருக்கும் முதுகு மற்றும் காது பகுதியில் வெட்டு விழுந்தது.
மருத்துவமனையில் உயிரிழந்தார்
படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவே உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படை உடனடியாக அமைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது.
ஆதரவாளர்கள் சாலை மறியல்
கொலை நடந்த இடத்தில் ஆம்ஸ்ட்ராங் புதிதாக வீடு கட்டி வந்தார். அங்கு அவருக்கு ஏற்கனவே ஒரு வீடு இருந்தது. அதனை இடித்துவிட்டு தற்போது புதிதாக அங்கு வீட்டை கட்டி வந்தார். பெரம்பூரில் வீடு கட்டும் பணிகள் நடப்பதால் தற்காலிகமாக அவர் அயனாவரத்தில் குடி பெயர்ந்துள்ளார். இருப்பினும், தினமும் மாலையில் பெரம்பூருக்கு வந்து தனது புதிய வீடு கட்டுமான பணியை பார்வையிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், நேற்று வீட்டின் கட்டுமான பணியை பார்வையிட பெரம்பூர் பகுதிக்கு வந்தபோதே இந்த கொலை நடந்துள்ளது.
காவல் நிலையத்தில் இருந்து வெகு சிறு தொலைவில் இப்படி நடந்திருக்கிறது என்று ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், அவரது ஆதரவாளர் கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய நிலையில், திமுக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும், பல்வேறு இடங்களில் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களும், பிஎஸ்பி கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் விளக்கம்
தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் கொலை குறித்து சென்னை காவல்துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ X தளத்தில்,"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52), முன் விரோதம் காரணமாக பெரம்பூர், செம்பியம் காவல்நிலையம் எல்லையில் உள்ள வேணுகோபால் சாமி கோவில் தெருவில் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 10 காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்ற சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை தொடர்கிறது" என குறிப்பிட்டுள்ளது.
Important Update:
Armstrong, State President, Bahujan Samaj Party was assaulted by unknown persons with knives at Venugopal Samy Kovil Street, Perambur in Sembium Police station limits, due to previous enmity.
He was admitted to the hospital for treatment but succumbed to…
கைதான 8 பேர் யார் யார்?
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் யார், போலீசார் கூறுவது போல் முன் விரோதம் என்றால் அதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு மற்றும் 7 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
சென்னை சீனிவாசபுரத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருக்கிறதா, அதற்கு பழிக்குப் பழிவாங்கும் செயலாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருக்கிறார்களா எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சென்னை பட்டினம்பாக்கம் அருகே கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது உதவியாளர் மாதவன் ஆகியோர் கும்பலால் தாக்கப்பட்டனர். இதில் ஆற்காடு சுரேஷ் உயிரிழந்தார், மாதவன் உயிர் தப்பினார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மற்றொரு கும்பலால் மாதவன் கொல்லப்பட்டார்.
ஆற்காடு சுரேஷ் கொலையின் பின்னணி
சென்னை புளியந்தோப்பு நரசிம்ம புரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி, ஆற்காடு சுரேஷ். இவர் மீது 7 கொலை வழக்கு உள்பட 40 குற்றவழக்குகள் இருந்தன. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேலூர் மாவட்டத்துக்கு குடிபெயர்ந்த ஆற்காடு சுரேஷ், வழக்கு விசாரணைக்காக மட்டும் சென்னைக்கு அவ்வப்போது வந்து சென்றார். அதன்படி, கடந்தாண்டு ஆக. 18ஆம் தேதி ஒரு வழக்கின் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அதன் பின்னர், மாலையில் உணவருந்த பட்டினப்பாக்கம் கடற்கரை சென்றிருந்தபோது அவரை காரில் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் அதிமுக பிரமுகராக அறிய்ப்படும் ஜோகன் கென்னடி உள்ளிட்ட 11 பேரை போலீசார் ரைது செய்தனர்.
மாதவனும் சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவரே. இவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் மாதவன் ஐஸ் ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தபோது மாதவனை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒரு கும்பல் தாக்க முயன்றது. சுதாரித்துக் கொண்ட மாதவன், அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பி ஒடினார். ஆனாலும், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
மேலும் படிக்க | திருச்சியில் என்கவுண்டர்! பிரபல ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீசார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ