ஓராண்டு திமுக ஆட்சியில் 6 லாக் அப் மரணங்கள் - ஓர் அலசல்!

LockUp Deaths Of DMK Government : கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது, லாக்-அப் மரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் என சொல்லப்பட்ட, சந்தேகிக்கப்படுகிற, விசாரணையில் உள்ள மரணங்களைக் குறித்து விரிவாக ஆராயலாம்.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 13, 2022, 01:09 PM IST
  • ஓராண்டு திமுக ஆட்சியில் தொடரும் லாக் அப் மரணங்கள் ?
  • காவல்துறையினர் மீதான நடவடிக்கை மட்டும் போதுமானதா ?
  • தொடரும் மரணங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது திமுக ?
ஓராண்டு திமுக ஆட்சியில் 6 லாக் அப் மரணங்கள் - ஓர் அலசல்!  title=

உலகம் முழுக்க அரங்கேறும் அதிகார பாசிஸ வேட்டையால் விசாரணைக் கைதிகள் மரணமடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. ‘அதிகாரம்’ தனக்குக் கீழிருக்கும் விளிம்பு நிலை மனிதர்களை எவ்வளவு தூரம் வேட்டையாட முடியும் என்பதை இப்போதுவரை வரலாறு கண்கூடாக பார்த்து வருகிறது. விசாரணைக் கைதி மரணங்கள் எந்த ஆட்சியிலும் நடைபெறத்தான் செய்கிறது. காவல்துறை என்னும் காலனிய மனோபாவ அடக்குமுறை அமைப்பு இன்னும் ‘Obey the Order’ வடிவத்தில் இருந்து மாறாததன் விளைவாக, அதிகாரம் vs விளிம்புநிலை மோதல்கள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, நாம் அப்பாவி உயிர்களை பலி கொடுக்க வேண்டியுள்ளது. 

காவல்துறை அமைப்பில் உள்ள சிக்கல்களைக் குறித்த உரையாடல்கள் இன்னும் தொடக்கப்படவே இல்லை என்பதுதான் நிதர்சனம். வெறும் வார விடுமுறை, மன அழுத்தம் போக்குவதற்கான விழிப்புணர்வு போன்ற எல்லைகளிலேயே நின்றுவிடுவது ஆரோக்கியமான நகர்வல்ல. முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு பிரச்சாரத்திற்காக ஒரு வீடியோவை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். அதில், ‘காவல்துறை எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சயண்மின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்திருந்தார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவியேற்ற நாளில் இருந்து ஓராண்டைக் கடந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், திமுக ஆட்சியில் இதுவரை கிட்டத்தட்ட 6 விசாரணைக் கைதி மரணங்கள் நிகழ்ந்துள்ளன அல்லது நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றன.!  

மேலும் படிக்க | 8 மாதங்களில் கட்டடம்- 4 ஆண்டுகளாக ஒற்றை செங்கல்: வைரலாகும் சு.வெங்கடேசனின் பதிவு

சத்தியவான் - தஞ்சாவூர்

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீதா நகர் பகுதியில் வசித்து வரும் சாமிநாதன் என்பவரது வீட்டில் நகை, பணம் ஆகியவைக் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிப் பகுதியை சேர்ந்த சத்தியவான் (31) என்ற இளைஞரை, தனிப்படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் கைதுசெய்தனர். அவரை மேற்கு காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று போலீஸார் விசாரித்து வந்தனர். 

sathyavan

பின்னர் அதிகாலை சத்தியவான் போலீஸ் ஸ்டேஷனிலேயே மயங்கிவிட்டதாகத் தெரிகிறது. போலீஸார் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் சத்தியவான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த வழக்கில் போலீஸார் தரப்பில்,  சத்தியவான் நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. 

மணிகண்டன் - ராமநாதபுரம் 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, கீழத்தூவல் காவல்நிலைய காவலர்கள் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் எனக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த இளைஞர் நள்ளிரவில் எப்படி உயிரிழந்திருக்க முடியும் என்ற கேள்வியின் புதிருக்கு காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்தார். 

மேலும் படிக்க | ஆவினில் உற்பத்தி இல்லாத பொருள் எப்படி சத்துமாவு தொகுப்பில் வந்தது... என்ன நடக்கிறது?

அதில், “கல்லூரி மாணவன் மணிகண்டன் வீட்டில் இருந்து  விஷ பாட்டில்  கைப்பற்றப்பட்டது. மணிகண்டன் இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரவி வருகிறது. மணிகண்டன் உடன் பைக்கில் பயணித்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவரான மணிகண்டன் முற்றிலும் குற்றப்பின்னணி இல்லாதவர். எனவே அவர் போலீஸ் தாக்கியதால் உயிரிழக்கவில்லை. அதற்கான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுவிட்டது. இதுமட்டுமல்லாமல், மணிகண்டனின் உடற்கூராய்வு முடிவிலும் விஷம் குடித்து இறந்ததாகவும், உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மணிகண்டனின் பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டதால், அவர்களிடமும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் உயர்நீதிமன்றத்திலும் அறிக்கையாக தாக்கல் செய்யபட்டுள்ளது.’ 

manikandan

இந்த விவகாரத்தில் மணிகண்டனின் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுவது என்னவெனில், ‘தற்கொலை செய்யும் எண்ணமே மணிகண்டனிடம் இருந்ததில்லை. அந்த விஷ மருந்து பாட்டில் எங்களது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறியிருக்கின்றனர். அந்த விஷ மருந்து எங்கள் ஊரிலேயே கிடையாது. வெறும் எலி, பூச்சி மருந்தோடு வைத்துக்கொள்வது சரி. காவல்துறை சொல்லும் அந்த விஷ பாட்டிலை வாங்க வேண்டுமென்றால் 10.கி.மீ தூரம் செல்ல வேண்டும். எப்படி அந்த விஷ பாட்டிலை மணிகண்டன் வாங்கியிருக்க முடியும்.? ஏனெனில் அவன் எங்கள் வீட்டில்தான் அன்று இருந்தான்.!’ 

பிராபகரன் - சேலம் 

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரபாகரன். இவரது மனைவி ஹம்சலா. இவர்கள் இருவரும் திருட்டு வழக்கில் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்காக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரபாகரனை நாமக்கல் கிளைச் சிறையிலும், ஹம்சலாவை சேலம் மத்திய பெண்கள் சிறைச்சாலையிலும் போலீஸார் அடைத்தனர். இதன்பின்னர், ஜனவரி 12ம் தேதி காலை திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபாகரன் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.

prabakaran

பிராபகரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மாற்றுத்திறனாளி அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்கினர். விடாப்படியாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நீண்டுவந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் மனைவி ஹம்சலா அளித்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பேட்டியில், ஜனவரி 8ஆம் தேதி தன்னையும், தனது கணவரையும் போலீஸார்கள் அழைத்துக் கொண்டுச் சென்றதாகவும், அங்கே அடித்து சித்ரவதை செய்து ஆபாசமாக திட்டியதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவரைக் கொன்ற காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

மேலும் படிக்க | திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது... ஆனால் முதல்வருக்கு தொடர்பில்லை - அண்ணாமலை!

பிரச்சனையின் வீரியம் அதிகமாக, பிரபாகரனின் மரணம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சந்திரன், மற்றும் பூங்கொடி , தலைமை காவலர் குழந்தைவேலு ஆகிய 3 பேரும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளார். 

விக்னேஷ் - சென்னை

விக்னேஷ் சந்தேக மரண வழக்கில், சிசிடிவி காட்சி பெரும் திருப்புமுனையாக இருந்தது. நடந்தது என்னவென்றால், சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி உதவி ஆய்வாளர் தலைமையிலான தலைமைச் செயலக காலனி காவலர்கள் கைது செய்தனர். உடனடியாக இருவரும் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கு விசாரணை நடந்து வந்த நிலையில், திடீரென விக்னேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் சொல்லப்பட்டது. அதாவது, விசாரணையில் இருந்த விக்னேஷிற்கு திடீரென வலிப்பு வந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே உயிரிழந்துவிட்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். ஆனால், காவலர்கள் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. 
இதனிடையே, விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சிசிடிவி காட்சிகள் திடீரென வெளியானது. 

vignesh

அதுவரை, தேங்கியிருந்த இந்த வழக்கில், பெரும் திருப்புமுனையாக அமைந்தது இந்த சிசிடிவி காட்சி. காவல்துறையினர் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவலர்கள் தற்போது இந்த வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். 

சிசிடிவி காட்சியால் அப்பட்டமாக தெரியவந்த விக்னேஷ் மரணத்தை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. தற்போது விக்னேஷ் மரணம் தொடர்பாக 4 வாரங்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான இந்த வழக்கு தொடர்ந்து நீடிக்கிறது. 

தங்கமணி - திருவண்ணாமலை

மர்மமான முறையில் உயிரிழந்த தங்கமணியின் விவகாரம் சட்டப்பேரவையில் அதிர்வலையை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை என்கிற மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனை வழக்கில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி - தமிழ்நாட்டுக்கு தலையெழுத்து எழுதிய தலைவன்!

அடுத்த நாளான ஏப்ரல் 27ம் தேதி அன்று காலையில் தங்கமணிக்கு வலிப்பு வந்ததாகவும், அன்று மாலையே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மர்மமான முறையில் உயிரிழந்த மலைவாழ் வகுப்பைச் சேர்ந்த தங்கமணியின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், நேர்மையான முறையில் விசாரணை நடத்திட உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனித்தீர்மானம் கொண்டுவந்து குரல்கொடுத்தார். 

thangamani

பின்னர் அதே சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கமணி வலிப்பு நோயால் உயிரிழந்திருப்பது உடற்கூராய்வில் தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாகவும், ஆனாலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு காவல்துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், நியாயமான முறையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். விசாரணை இன்றும் தொடர்கிறது.!

ராஜசேகர் - கொடுங்கையூர் 

லாக் அப் மரணங்கள் தொடர்பான விவாதம் தீவிரமாகி அதுதொடர்பாக காவல்துறையினருக்கு தீவிர அறிவுறத்தல்களை முதலமைச்சர் முதல் டிஜிபி சைலேந்திர பாபு வரை வழங்கப்பட்டு வந்தாலும், மீண்டும் நேற்று ஒரு லாக் அப் மரணச் செய்தி. 

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்பு, திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக போலீஸார் தரப்பு சொல்லும் செய்தி. ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

rajasekar

சந்தேக மரணம் அடைந்துள்ள ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பல காவல்நிலையங்களில் ராஜசேகர் மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மரணச் செய்தி அறிந்தவுடன், சென்னை காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க | ‘என்ன இருந்தாலும் நானும் டெல்டாக்காரன் தான்.!’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

ராஜசேகரின் மரணத்தையொட்டி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தொடரும் லாக் அப் மரணங்களை எப்படித் தடுக்கப்போகிறது தமிழ்நாடு அரசு ?. இது ‘திராவிட மாடல்’ என தேசிய அளவில் அரசியல் அலையை உருவாக்க எத்தனிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் அரங்கேறும் லாக்-அப் மரணங்களை எப்படி கையாளப்போகிறார் ? அதற்கான தீர்வுகள் என்ன ?, இடைக்கால நிவாரண நடவடிக்கைகளைத் தாண்டி, காவல்துறை கட்டமைப்பில் மாற்றப்பட வேண்டிய தொலைநோக்குச் சிந்தனையின் வழிமுறைகள் என்னென்ன ? என்பதே அனைவரின் கேள்வி.! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News