Alanganallur Jallikattu 2025 Latest News Updates: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.50 மணிக்கு, வீரர்கள் உறுதிமொழியுடன் நடைபெற்றது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்த நிலையில், மாலை 6 மணி வரை நடைபெற்றது. நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி காலை 6.30 மணிக்கு சரியாக தொடங்கிய நிலையில், இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே தொடங்கியது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: பரிசுகளை அள்ளிய காளைகள்
இதனால், மொத்தம் இறுதிச்சுற்றோடு 11 சுற்றுகள் திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதிச்சுற்றோடு சேர்த்து 9 சுற்றுகள் மட்டுமே நடைபெற்றது. மொத்தம் 490 பேர் தகுதிபெற்ற நிலையில், கால தாமதம் ஆனதால் சுற்றுக்கு தலா 50 வீரர்கள் வீதம் 8 சுற்றில் வெறும் 400 வீரர்கள் மட்டுமே களமிறங்கினார்.
ஒவ்வொரு சுற்றிலும் காளையை பிடித்தவர்கள் கடைசி சுற்றில் களமிறங்கினார். மீதம் இருந்த வீரர்கள் களமிறங்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர். மொத்தம் 1000 காளைகள் களமிறங்கின. போட்டியில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை சிதறிடித்து காளைகளே அதிகளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: மிரட்டிய அபி சித்தர்
குறிப்பாக, சிறந்த மாடுபிடி வீரர்களில் முதல் பரிசான எலெக்ட்ரிக் காரை அபி சித்தர் வென்றார். அபி சித்தர் 20 காளைகள் பிடித்து மிரட்டினார். இவர் கடந்தாண்டு அலங்காநல்லூரில் இரண்டாம் இடம் பிடித்த நிலையில், ஜல்லிக்கட்டு கமிட்டி ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதால்தான் தனக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டியிருந்தார். அப்போது அது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இருப்பினும், அதை தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரியில் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் அபி சித்தர் 10 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார். அங்கு அவருக்கு முதல் பரிசாக மஹிந்திரா தார் கார் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு தவறவிட்ட முதல் பரிசை, அபி சித்தர் இந்தாண்டு சொல்லி அடித்தார் எனலாம்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: நவீனுக்காக முதல் பரிசு - அபி சித்தர்
அப்படியிருக்க, இன்று முதல் பரிசை வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபி சித்தர்,"அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பலியான நவீன் நினைவாக இன்று முதல் பரிசு பெற்றேன். நவீனுக்கு அரசாக பார்த்து ஏதாவது செய்தால் நல்லது. அவர்தான் அவரது வீட்டுக்கு ஒரே மகன் ஆவார். அவர் இருந்தால் அவரது குடும்பத்திற்கு வாழ்க்கை முழுவதும் எந்த பிரச்னையும் இருக்காது. எனவே, அதனை ஈடுகட்டும் வகையில் நவீனின் குடும்பத்திற்கு அரசு ஏதாவது செய்தால் நல்லது" என பேசியிருந்தார்.
மதுரை விளாங்குடியை சேர்ந்த நவீன் குமார், நேற்று முன்தினம் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை தாக்கியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன் குமாருக்கு ரூ.3 லட்சத்தை அவரது குடும்பத்தினருக்கு நிவாரணமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | TN RAIN ALERT: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ