அதிமுக தலைமை கழகத்தில் பெண் உறுப்பினர்கள் மோதல்

Last Updated : Mar 21, 2017, 04:41 PM IST
அதிமுக தலைமை கழகத்தில் பெண் உறுப்பினர்கள் மோதல் title=

அதிமுக தலைமை கழகத்தில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அதிக ஓட்டுகளை பெறுவார்கள் என்றார்.

அதற்கு பா.வளர்மதி, அவரை பற்றி இங்கு பேசக்கூடாது என்றார். பதிலுக்கு நிர்மலா பெரியசாமி, மக்கள் செல்வாக்கு உள்ளவரை பற்றி பேசுவதில் தவறில்லை என்றார். 

நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு தான் இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஏன் இங்கு வருகிறீர்கள்? என்று பா.வளர்மதி அவரை பார்த்து கேட்டார்.

ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், இரட்டை இலை சின்னமும் இங்கு இருப்பதால் தான் வருகிறோம். உங்களிடம் பேசி பலனில்லை, யாரிடம் பேச வேண்டுமோ? அவரிடம் பேசிக்கொள்கிறோம் என்று கூறி கூட்டத்தில் இருந்து நிர்மலா பெரியசாமி வெளிநடப்பு செய்ய முயன்றார்.

அப்போது அவருக்கும், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, குண்டு கல்யாணம் ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதைத்தொடர்ந்து நிர்மலா பெரியசாமி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இதுபற்றி நிர்மலா பெரியசாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற நான் என் அருகில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது ஓ.பி. அண்ணன் நமக்கு எதிரியா? 

அவரும் கட்சிக்காரர்தானே? எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் நன்றாக இருக்குமே? என்று பேசிக் கொண்டு இருந்தேன்.

இதை கேட்டுக் கொண்டு இருந்த சி.ஆர்.சரஸ்வதி வேகமாக எழுந்து, ஓ.பி.எஸ்.சை எதிரி இல்லை என்று எப்படி நீ சொல்லலாம் என்றார்.

அதற்கு நான், “எனக்கு அவர் எதிரி இல்லை. அவரும் கட்சிக்காரர்தான்” என்றேன்.

உடனே சின்னம்மாவை அவர் எப்படியெல்லாம் வசை பாடினார் தெரியுமா? என்று அவருக்கு விசுவாசிபோல் சகட்டுமேனிக்கு என்னை பேச தொடங்கினார்.

நான் தேவையில்லாமல் பேசாதீர்கள். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். இரட்டை இலை சின்னம் பறிபோய் விட கூடாது என்பதற்காகத்தான் சொல்கிறேன்” என்றேன்.

உடனே அவர்களுடன் குண்டு கல்யாணமும் சேர்ந்து கொண்டு என்னை வசை பாட தொடங்கினார். “வேண்டுமானால் நீங்கள் கட்சியை விட்டு போங்கள்” என்றார்.

அதைக் கேட்டதும் “இப்படி சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” என்று நான் கேட்டேன். அப்போது மத்தியஸ்தம் செய்ய வந்தது போல் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வந்தார். அவரும் ஒருமையில் பேச தொடங்கினார்.

இப்படி ஒருமையில் பேசும் வார்த்தையெல்லாம் என்னிடம் வைத்து கொள்ளாதீர்கள். நீங்கள் முன்னாள் அமைச்சர். அப்படி நடந்து கொள்ளுங்கள்” என்றேன்.

அதன்பிறகும் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. அங்கிருந்து வெளியேறி மகாலிங்கத்திடம் நடந்த வி‌ஷயத்தை தெரிவித்து விட்டு வந்து விட்டேன்.

நான் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போகக் கூடாது என்றுதான் நினைத்து இருந்தேன். ஆனால் அங்கு தவறானவர்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். இனி இது மாறவும் செய்யாது. எனக்கு மனசாட்சி உறுத்துகிறது.

Trending News