10_வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இந்த தொடர் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியை சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் இணைந்து நடத்துகிறது.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர். இந்தியா சார்பில் மேரிகோம் தலைமையில் 10 வீராங்கனை கலந்துக் கொள்கின்றனர். அவர்கள் மனிஷாமெளன், சரிதா தேவி, பிங்கி ஜங்க்ரா, சவீத்தி பூரா, சோனியா, சிம்ரஜித் கவுர், லவ்லினா போர்க் கோஹைன், பாக்யபதி கச்சாரி, சீமா யூனிபா ஆகியோர் ஆவார்கள்.
இந்நிலையில் நேற்று அரியானா மாநிலத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மனிஷாமெளன்(வயது20) முதல் முறையாக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் களம் கண்டார். அவர் அமெரிக்கா வீராங்கனை கிறிஸ்டினா குருசை எதிர் கொண்டார். ஆக்ரோசமாக விளையாடிய இந்திய வீராங்கனை மனிஷாமெளன் முதல் சுற்றிலேயே 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேபோல மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 60 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா தேவி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை மணிப்பூர் மக்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.