குரூப்-ஏ போட்டிகள் ஓவர்... இந்திய அணியின் பிரிவில் சேரப்போவது யார்?

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் - ஏ சுற்றுப்போட்டிகள் இன்று நிறைவடைந்தன.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 20, 2022, 05:45 PM IST
  • குரூப் சுற்றுப்போட்டிகள் நாளையுடன் நிறைவடைகிறது.
  • குரூப்-பி பிரிவில் நான்கு அணிகளும் தலா 1 வெற்றி, 1 தோல்வியை பெற்றுள்ளன.
  • குரூப்-ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
குரூப்-ஏ போட்டிகள் ஓவர்... இந்திய அணியின் பிரிவில் சேரப்போவது யார்? title=

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த அக். 16ஆம் தேதி தொடங்கியது. இந்த சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் 'குரூப் - ஏ' பிரிவிலும், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் 'குரூப் - பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.  

'குரூப் - ஏ' பிரிவின் கடைசி லீக் போட்டிகள் இன்று நடைபெற்றன. ஆஸ்திரேலியாவின் கீலாங் நகரின் சைமண்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் தலா 2 வெற்றி, 1 தோல்வி என 4 புள்ளிகளை பெற்றது. ரன்ரேட் அடிப்படையில், இலங்கை முதலிடத்தையும், நெதர்லாந்து அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. 

இதனால், 2 புள்ளிகளுடன் இருக்கும் நமீபியா அணி, தான் தகுதிபெற வேண்டும் என்றால் யுஏஇ  அணியை வீழ்த்த வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இந்திய நேரப்படி 1.30 மணிக்கு நமீபியா - யுஏஇ அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற முதலில் விளையாடிய யுஏஇ, 148 ரன்களை எடுத்தது.

மேலும் படிக்க | இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்வது அமித் ஷா முடிவுதான் - விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து‍!

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது. யுஏஇ அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், நமீபியா பேட்டர்கள் வரிசையாக பெவிலியனுக்கு திரும்பினர். அதில், டேவிட் வீஸ் மட்டும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ஒருக்கட்டத்தில், 69 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நமீபியா அணிக்கு, வீஸ் - ரூபன் இணை சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுக்க, வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆனால், துரதிஷ்டவசமாக அதிரடி காட்டி வந்த டேவிட் வீஸ் கடைசி ஓவரின் நான்காம் பந்தில், பவுண்டரி லைன் அருகில் கேட்சாகி வெளியேறினார். இதனால், நமீபியா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. 

முன்னதாக, இலங்கை அணியை வீழ்த்தியிருந்த நமீபியா, அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. யுஏஇ அணி, முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், கடைசி போட்டியில் நமீபியாவை வீழ்த்தி ஆறுதல் அடைந்துள்ளது. 

தற்போது, 'குரூப் - ஏ' பிரிவில் இலங்கை முதலிடத்திலும், நெதர்லாந்து 2ஆம் இடத்திலும் உள்ளன. இதனால், சூப்பர் 12 சுற்றில், இலங்கை அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள முதல் பிரிவில் இடம்பெற உள்ளது.  அதுபோல, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் இடம்பெற்றுள்ள சூப்பர் 12 சுற்று இரண்டாம் பிரிவில் நெதர்லாந்து அணி இடம்பிடித்துள்ளது. 

டி20 உலகக்கோப்பையின் குரூப் சுற்றுப்போட்டிகள் நாளையுடன் (அக். 21) நிறைவடைய உள்ளன. 'குரூப் - பி' பிரிவு அணிகளுக்கான போட்டிகள் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு மேற்கு இந்திய தீவுகள் - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து, மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. 

இப்பிரிவில் நான்கும் அணிகள் தலா 1 வெற்றி, 1 தோல்வியை பெற்றுள்ளதால், நாளைய போட்டிகளில் வெற்றியடையும் அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு தகுதிபெறும். எனவே, நாளைய போட்டிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளைய போட்டியில் வென்று, பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி, சூப்பர் -12 சுற்றில் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இந்த டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 போட்டிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News