Nithis Kumar Reddy Century Records | இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ்குமார் ரெட்டி அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரும் சிக்கலில் இருந்தபோது சிறப்பாக ஆடிய அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். அப்போது மைதானத்தில் இருந்த நிதீஷ்குமார் ரெட்டியின் அப்பா கண்ணீர் விட்டு அழுதார். 90-களை நிதீஷ்குமார் கடந்தவுடன் பதற்றமாகவே இருந்தார். ஒவ்வொரு பந்துக்கும் கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தார். நிதீஷ்குமார் 100 ரன்களை அடித்தது உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார்.
நிதீஷ்குமார் ரெட்டி சாதனைகள்
நிதீஷ்குமார் இந்த சதம் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 8வது பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை வசமாகியுள்ளது. அடுத்ததாக இந்திய அணிக்காக மிக இளம் வயதில் சதமடித்த மூன்றாவது கிரிக்கெட் பிளேயர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர், இரண்டாவது இடத்தில் ரிஷப் பந்த் இருக்கின்றனர். அவர்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார் நிதீஷ் குமார் ரெட்டி.
மேலும் படிக்க | CSK: கான்வே, ரவீந்திரா இல்லையென்றால்... சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
நிதீஷ் - வாஷிங்டன் பார்ட்னர்ஷிப்
இவருக்கு பக்கபலமாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடினார். அவரும் அரைசதம் அடித்தார். பின்னர் மழை குறுக்கிட்டு போட்டி மீண்டும் தொடங்கியபோது 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார் வாஷிங்டன் சுந்தர். நிதீஷ்குமார் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் இருவரும் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நிதீஷ் குமார் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் அமைத்த பார்ட்னர்ஷிப் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க உதவியது.
ஆஸ்திரேலியா முன்னிலை
இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது. இருப்பினும் இந்த இடத்துக்கு இந்திய அணி வந்திருப்பதே நிதிஷ்குமார் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் இருவரின் சிறப்பான பேட்டிங் தான். இல்லையென்றால் இந்திய அணி பாலோன் ஆகி தோல்வி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். இப்போது ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தபட்ச ரன்களுக்கு சுருட்டினால் வெற்றி பெறக்கூட இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆஸி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்
மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ஸ்டீவ் ஸிமித் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் எடுத்தார். கொன்ஸ்டாஸ், கவாஜா, லபுசேன் ஆகியோரும் அரைசதம் அடித்ததால் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலைக்கு சென்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ரோகித், தொடர்ந்து மிக மோசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஜெய்ஷ்வால் அற்புதமாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருக்கிறது. இப்போதைய சூழலில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் முதல் இன்னிங்ஸ் லீட் ஆஸ்திரேலியா வசம் இருப்பதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.
மேலும் படிக்க | ஜெய்ஸ்வால் ரன்அவுட்... விராட் கோலியின் தவறா? நேரலையில் சண்டைப் போட்ட மூத்த வீரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ