IPL T20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது..!
துபாயில் நடைபெற்று வரும் IPL 2020 போட்டி தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களும் அடிக்க டெல்லி 150 ரன்களை தாண்டும் வாய்ப்பை பெற்றது. அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் அடித்தார்.
ALSO READ | விராட் கோலி திருமணத்திற்கு முன் டேட்டிங் செய்த ஆறு அழகிகள் யார் தெரியுமா?
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஓரளவு தாக்குப் பிடித்து 34 ரன்கள் அடித்து வெளியேறினார். ஸ்மித் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். இதனால் ராஜஸ்தான் அணியினர் ரன்கள் எடுக்கத் தவறினர். மற்ற ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ராகுல் டெவாட்டியா கடைசி வரை போராடினார். ஆனால், அவர் 38 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ராஜஸ்தான் அணி 138 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், அஷ்வின், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், தனது 5-ஆவது வெற்றியைப் பெற்ற டெல்லி அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.