மிக குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் பட்டியலில் பும்ரா இடம் பிடித்துள்ளார்!
இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஜடேஜா, ரஹானே ஆகியோர் கை கொடுக்க இந்திய அணி 296 ரன்களை எட்டியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக இப்போட்டியில் தேநீர் இடைவேளை முடிந்த பின், பிராவோவை எல்பிடபிள்யு முறையில் பும்ரா வெளியேற்றினார். பிராவோ 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையினை பும்ரா பெற்றார்.
Bumrah strikes immediately after Tea. Gets Bravo out LBW. West Indies 88/4 #TeamIndia #WIvIND pic.twitter.com/WBX9gjONOp
— BCCI (@BCCI) August 23, 2019
இதன்மூலம் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பும்ரா. அதாவது 11 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் பும்ரா.
11 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் பும்ரா இருக்கிறார். இவரைத்தொடர்ந்து வெங்கடேஷ் பிரசாத் / ஷமி (13 போட்டிகள்), இர்பான் பதான் / ஸ்ரீசாந்த் (14 போட்டிகள்), காவ்ரி / கபில் தேவ் (16 போட்டிகள்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதேப்போல் ஒட்டு மொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியிலில் அஸ்வின் (9 போட்டிகள்), அனில் கும்ப்ளே (10 போட்டிகள்)முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் நம்பர் 1 இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். 11 டெஸ்ட் போட்டிகளிலேயே விக்கெட்டுகளில் அரைசதம் அடித்து தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ள பும்ரா விரைவில் டெஸ்ட் முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.