பெர்த்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ICC மகளிர் டி20 உலகக் கோப்பையின் குரூப் A போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இப்போட்டியில் ஸ்பின்னர் பூனம் யாதவ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது. 16 வயதான தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா 17 பந்து வீச்சில் 39 ரன்கள் எடுத்தார், அதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் இருந்தன. ஜெமிமா ரோட்ரிகஸும் ஒரு முக்கியமான 37 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்தில் சல்மா கௌதான் மற்றும் பன்னா கோஷ் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் முர்ஷித்தா கௌதான் 30(26), நிகார் சுல்தான் 35(26) குவித்தனர் எனினும் வங்கதேச அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 124 ரன்கள் மட்டுமே குவித்த வங்கதேச அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பங்களாதேஷின் துரத்தலைத் தடுத்து நிறுத்த மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய பூனம் யாதவின் தரமான சுழல் பந்துவீச்சுக்கு எதிராக பங்களாதேஷ் வெற்றி வாய்ப்பினை தவறவிட்டது. இவருக்கு துணையாக அருந்ததி ரெட்டி (2/33), பாண்டே (2/14) தலா இரண்டு விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி கயக்வாட் (1/25) ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் வெற்றியின் மூலம் இந்தியா குழு-A-வில் இந்தியா 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவை தொடர்ந்து நியூசிலாந்து அணி 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளது. வங்கதேச அணி இறுதி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.