இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் குவித்துள்ளது!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
Australia finish the day on 8/0, a deficit of 435 runs, after India declare on 443/7 on the second day of the Melbourne Test.#AUSvIND SCORECARD ⬇️ https://t.co/XyVZQv8kRp pic.twitter.com/t8bwzWqYp4
— ICC (@ICC) December 27, 2018
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் நாள் மெல்பர்ன் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரி 8(66) ரன்களில் வெளியேற, மற்றொரு வீரரான மயங்க் அகர்வால் 76(161) ரன்கள் குவித்தார். மயங்க் அகர்வாலின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 106(319) ரன்கள் குவித்து தனது 17-வது டெஸ்ட் சதத்தினை அடித்தார். இவருக்கு துணையாக அணித்தலைவர் விராட் கோலி நிதானமாக விளையாடி 84(204) ரன்கள் குவித்தார். இதனையடுத்து ஆட்டத்தின் 169.4-வது பந்தில் ரவிந்திர ஜடேஜா 4(3) ரன்களில் வெளியேற இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அத்தருவாயில் ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 63(114) ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸி., தரப்பில் பேட் கம்மிஸ் 3 விக்கெட் குவித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸி., தொடக்க வீரர்களாக மார்கஸ் ஹரிஸ் 5*(13) மற்றும் அரோண் பின்ச் 3*(23) ஆகியோரை களமிறக்கியது. இரண்டாம் நாள் முடிவடைந்த நிலையில் ஆஸி., விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் குவித்திருந்தது. இந்த எண்ணிக்கையின் படி இந்தியாவின் ரன் இலக்கை எட்ட ஆஸி அணி மேலும் 435 ரன்கள் குவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.