2022 காமன்வெல்த் போட்டிகள் நிறைவு - 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி

Common wealth Games 2022 : பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் 61 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.   

Written by - Chithira Rekha | Last Updated : Aug 9, 2022, 12:31 PM IST
  • பர்மிங்காம் காமன்வெல்த் போட்டி
  • 4-வது இடத்தில் நிறைவு செய்த இந்தியா
  • 61 பதக்கங்களை வென்று சாதனை
 2022 காமன்வெல்த் போட்டிகள் நிறைவு - 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி title=

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28-ம் தேதி பிரம்மாண்டமான விழாவுடன் தொடங்கியது. 72 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான நேற்று, இந்தியா 4 தங்கப் பதக்கங்களை வென்றது. பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆடவர் பிரிவில் லக்சயா சென்னும் தங்கம் வென்றனர். 

இதை தொடர்ந்து நடந்த பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். அதே போல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார். இதனால் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இறுதியாக நடைபெற்ற ஆண்கள் ஆக்கி இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் கடைசி பதக்கமாக இது அமைந்தது. இறுதியாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று, இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.

மேலும் படிக்க | CWG 2022 | பேட்மிண்டன் மகளிர் போட்டி - தங்கம் வென்றார் பி.வி. சிந்து

இந்தியா இதுவரை பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளில் இதுவே இந்தியாவின் சிறப்பான ஆட்டம் என விளையாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், 101 பதக்கங்களை வென்று இந்தியா 2-வது இடத்தைப் பிடித்தது.

இதில், 30 பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் இருந்தும், வில்வித்தையில் 8 பதக்கங்களும், கிரேக்க - ரோமன் மல்யுத்ததில்7 பதக்கங்களும், டென்னிசில் 4 பதக்கங்களும் அடங்கும். ஆனால், 2022 காமன்வெல்த் போட்டியில் இந்த எந்த போட்டியுமே நடைபெறவில்லை.

ஆனால், இம்முறை இந்திய அணி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், ஹாக்கி என பரவலாக பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது. 

டேபிள் டென்னிசில் மட்டும் இந்திய வீரர் சரத் கமல் இந்த முறை 4 பதக்கங்களை வென்றுள்ளார். இதே போன்று முதன்முறையாக  காமன்வெல்த் போட்டிகளில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்துவும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென்னும் தங்கம் வென்றுள்ளனர். அதே போல், 2010 காமன்வெல்த் போட்டியில் இடம் பெறாத கிரிக்கெட், ஜூடோவிலும் இந்திய அணி இம்முறை பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது. 

 

மேலும் படிக்க | காமன்வெல்த் போட்டிகள் - இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News