ஆடி மாதத்தில் முருகன் கோவில்களுக்கு காவடி எடுத்து வழிபாடு செய்வது வாழ்க்கையை வளம் பெறச் செய்யும் என்பதுடன் முந்தை வினைகளையும் தீர்க்கும். இந்தியாவில் பல தெய்வ வழிபாடு இருந்தாலும், வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு தமிழ்க்கடவுள் முருகருக்கு உண்டு. வழிபாட்டு முறைகளில் காவடி எடுத்து வணங்குவது என்பது முருகனுக்கு மட்டும் உரிய சிறப்பாகும். வட இந்தியாவில் சிவனுக்கு ஆடி மாதத்தில் காவடி எடுக்கும் வழக்கம் இருந்தாலும், அது ஹரித்வாருக்கு மட்டுமே செல்லும் காவடியாக இருக்கும்.
அறுமுகன் முருகனின் அறுபடை வீடுகளில் மட்டுமல்ல, முருகன் குடி கொண்டிருக்கும் அனைத்து தலங்களிலும் முருகனுக்கு மட்டுமே காவடி எடுக்கப்படுகிறது. முருகப் பெருமானை வணங்கும் திருவிழாக்களில் ஆடி மாத உற்சவமும் முக்கியமானது. ஆடி கிருத்திகை இந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
முருகனை வணங்குவதில் காவடி எடுத்து வணங்குவது சிறப்பான முறை ஆகும். முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கமும், காவடி எடுப்பதன் தாத்பரியத்தையும் தெரிந்துக் கொள்வோம்.
சிவபெருமானிடத்தில் வரங்களைப் பெற்றிருந்த இடும்பன், சூரனை அழித்த முருகனின் அடியாராக வாழ வரம் பெற்றார். இடும்பனுக்கு சிவபெருமான் அருள் புரிந்த இடம் இடும்பாவனம் ஆகும். அகத்திய மாமுனி இமய மலைச்சாரலில் இருந்த இரு மலைச் சிகரங்களுள் ஒன்றை சிவனாகவும் மற்றொன்றை சக்தியாகவும் கொண்டு வழிபட்டதால், அவை சிவகிரி, சக்திகிரி என பெயர் பெற்றன.
மேலும் படிக்க | நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!
தான் வழிபடும் இரு மலைகளையும், தனது இருப்பிடமான பொதிகை மலைக்குக் கொண்டுவர விரும்பிய அகத்தியர் அதற்காக முருகனை வழிபட்டு சக்தி பெற்றார். முருகனின் அருளாசியுடன் மலைகளை கொண்டு வந்த அகத்தியர், ஓய்வு எடுப்பதற்காக காட்டுப் பகுதியில் தங்கியிருந்தபோது, இடும்பன் தனது மனைவியுடன் அந்த வழியே சென்றுக் கொண்டிருந்தார். தம்பதி சமேதராக அகத்திய மாமுனியை வணங்கிய இடும்பனுக்கு ஆசி வழங்கினார் முனிவர்.
அவருக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய இடும்பனிடம், சிவகிரி சக்திகிரியை பொதிகை மலைக்குக் கொண்டு வந்து தருமாறு அகத்தியர் கேட்டுக்கொண்டார்.
அகத்தியரின் ஆசையை நிறைவேற்ற இடும்பன் இருமலைகளையும் தூக்க முயன்றபோது அவற்றை அசைக்கக்கூட முடியவில்லை. எத்தனையோ பெரிய மலைகளையெல்லாம் அநாயசமாக தூக்கும் இடும்பனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
பலவானான தன்னால் அசைக்கவே முடியாத இந்த மலையை, ஒரு முனிவர் எப்படி தூக்கினார் என்று ஆச்சரியப்பட்டாலும், அகத்தியரின் பெருமையை உலகிற்கு உணர்த்த இறைவன் செய்த விளையாட்டாக இருந்தது.
பொதிகை முனியான அகத்தியரை வணங்கி, மலையை தூக்க தனக்கு ஆசி வழங்க வேண்டும் என்று பணிந்த இடும்பனுக்கு முருகப்பெருமானுடைய மூல மந்திரத்தையும் வழிபாட்டு முறையையும் உபதேசித்தார்.
அகத்தியரிடம் குரு உபதேசம் பெற்ற இடும்பன், சிவகுமரனின் மூலமந்திரத்தை ஜபித்து மலைகளை வலம் வந்தபோது, எட்டு நாகங்கள் கயிறுகளாக மாறி இடும்பனிடம் வந்தன. தோள் மீது சுமக்கின்ற தடியாக, பிரம்ம தண்டம் வந்து, மலைகளை தூக்க விரும்பிய இடும்பனுக்கு உதவி செய்ய நின்றது.
இறையின் சித்தத்தை நிறைவேற்றும் வகையில், எட்டு நாகக் கயிறுகளையும் இரு உறிகளாக செய்த இடும்பன், சிவகிரி, சக்தி கிரிகளை இரண்டு உறிகளில் கட்டி அவற்றை தோள் தடியாக இருக்கின்ற பிரம்ம தண்டத்தின் இரண்டு பக்கங்களிலும் சேர்த்து பிணைந்து முருகனின் மூல மந்திரத்தை ஜபித்து தனது தோளில் இரு மலைகளையும் தூக்கினார்.
மேலும் படிக்க | முருகரின் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய படைவீடு! வீரபாகு க்ஷேத்திரத்தின் மகிமை!
இதுதான் காவடி தோன்றிய வரலாறு. இரு மலைகளை காவடியாகத் தூக்கிக்கொண்டு தென்திசை நோக்கி வரும் வழி முழுக்க முருகன் மந்திரத்தை சொல்லிக் கொண்டே வந்த இடும்பன், திருவாவினன்குடி எனப்படும் பழநியை நெருங்கியபோது, இளைப்பாறுவதற்காக மலைகளை இறக்கிவைத்தார். சிறிது நேரம் ஆசுவாசம் செய்து கொண்ட பிறகு காவடியைத் தூக்க முயன்றால் அவை அசையவே இல்லை. இடும்பனின் மனைவி இடும்பியும் உதவி செய்து பார்த்தாலும் மலை அசரவில்லை.
அப்போது, அங்கே வில்வமர நிழலில் நின்றுகொண்டிருந்த சிறுவன், இடும்பனால் மலையை தூக்கமுடியாத நிலையைக் கண்டு கேலியாக சிரித்தான். கேலியை தாங்கிக் கொள்ள முடியாத இடும்பன், சிறுவனை அடிப்பதற்காக முயன்றபோது கீழே விழுந்து மயக்கமாகிவிட்டார்.
இடும்பனின் மனைவி இடும்பிக்கு, வந்தது வடிவேலன் என புரிந்துவிட்டது. இடும்பிக்கு இரங்கிய தண்டம் தாங்கிய சிறுவன் தண்டபாணி, இடும்பனை விழித்தெழச் செய்தார். அந்த மலைச்சிகரங்கள் இரண்டும் இங்கேயே இருக்க வேண்டும் என்பதற்கான திருவிளையாடல் இது என்பதை சொன்ன முருகர், மலையின் அடிவாரத்தில் இடும்பனை தங்கி காவல் புரிய பணித்தார்.
சிவகிரி, சக்திகிரி இரண்டையும் இடும்பன் காவடியாகக் கொண்டு வந்ததுபோல், தனது பக்தர்கள் காவடி எடுத்துவந்து தன்னை வணங்குவார்கள் என்று அருள் புரிந்தார். பழனிக்கு வருபவர்கள், முதலில் இடும்பனை வணங்கிய பிறகே முருகனை வணங்குவார்கள் என்ற மதிப்பையும் கொடுத்தார் அருள் புரியும் பக்தவத்சலர்.
இடும்பனின் பக்தியை மெச்சிய முருகக் கடவுள், தனது காவலாளியாக ஏற்றுக் கொண்டதுடன், பழனிக்கு வரும் பக்தர்கள் தன்னை வணங்குவதற்கு முன்னர், பக்தனை வணங்க வேண்டும் என்று இட்ட கட்டளையை முருக பக்தர்கள் இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | செவ்வாய் தோஷத்தை போக்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ