யூடியூப்பில் யாரு வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.. மனம் திறந்த யூடியூபர் Taste With Ibrahim

சம்பாதிக்கணும்னு சானல் ஆரமிச்ச எனக்கு வாழ்க்கைய கொடுத்தது என்னோட வியூவர்ஸ் தான். அவுங்களுக்காக எங்க வேனும்னாலும் போக ரெடியாக இருக்கிறேன்- மனம் திறந்த (Taste With Ibrahim) யூடியூபர் முகமது இப்ராஹிம்.

Written by - Praveen S | Edited by - Shiva Murugesan | Last Updated : Mar 12, 2022, 01:49 PM IST
  • உண்மையாவே சம்பாதிக்கத்தான் யூடியூப் ஆரம்பிச்சேன்.
  • யூடியூப் தளத்தில் வீடியோ போட்டால் காசு கிடைக்கும் என நண்பர்கள் சொன்னாங்க.
  • ரூ. 6000 சம்பளத்துக்கு வேலை பார்த்த நான் இன்னைக்கு லட்சத்துல சம்பாதிக்கிறேன்.
யூடியூப்பில் யாரு வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.. மனம் திறந்த யூடியூபர் Taste With Ibrahim title=

ரூ. 6000 சம்பளத்துக்கு துணிக்கடையில் வேலைக்கு போயிட்டு இருந்த நான் இன்னைக்கு லட்சத்துல சம்பாதிக்கிறேன். நாங்கள் பகிரும் ஒவ்வொரு வீடியோவும் பலருக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் பல வியாபாரிகள் தொழில்ரீதியாக முன்னேறியுள்ளனர். இத விட என்ன வேணும்?  என்கிறார் முகமது இப்ராஹிம்.

25 வயதான முகமது இப்ராகிம் "Taste With Ibrahim" எனும் பெயரில் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உலாவருபவர். சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்கிறார்கள்.

நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்கள் கிடைக்கும் இடங்கள், மொத்த வியாபார சந்தைகள், நம்பகமான செகண்ட்ஹாண்ட் பொருட்கள் கிடைக்கும் கடைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் அன்றாடம் தேவைப்படும் A to Z என அனைத்து பொருட்கள் பற்றி நேரில் சென்று தீர விசாரித்து, அதை வீடியோவாக எடுத்து மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பதிவிட்டு வருகிறார். 

அதுமட்டுமில்லாமல், ஆரோக்கியமான மற்றும் ருசியான நல்ல உணவு கடைகளை சல்லடை போட்டு வடிகட்டி அலசி ஆராய்ந்து நேரில் சென்று ருசிப்பார்த்து, அதன் உண்மைத் தன்மையை குறித்து வீடியோ வெளியிடுகிறார். ஒருபக்கம் பொதுமக்களும் பயன்பெற வேண்டும் என்றும், அதேநேரத்தில் கடைக்காரர்களும் பயனடைய வேண்டும் என்பது தான் நம்ம ஃபார்முலா என பெருமையுடன் கூறுகிறார் நம்ம இப்ராகிம்.

நம்ம ஊரு டிஜிட்டல் நாயகனை இண்டெர்வியூ எடுக்க தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்ட போது, பல விசியங்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார். இண்டெர்வியூ எடுத்த நமக்கோ, ஒரு எதிர்பார்க்காத நல்ல தருணமாக அமைந்தது.

ஆரம்ப வழக்கை...
சொன்னா நம்பமாட்டீங்க ப்ரோ. 18 வயசுலயே துணிக்கடைக்கு வேலைக்கு போகவேண்டிய கட்டாய சூழ்நிலை. ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளம், சண்டே கூட விடுமுறை கிடையாது. வாழ்க்க இப்படியே போயிடுமோனு எல்லாரையும் போல முடிவில்லாத ஒரு கவலை இருந்தது. ஆனா இன்னைக்கு குறைந்தது மாசம் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் என மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.

ஏன் யூடியூபர் ஆகனும்னு முடிவு எடுத்தீங்க?
மறைக்க எதுவும் இல்ல ப்ரோ, உண்மையாவே சம்பாதிக்கத்தான் யூடியூப் ஆரம்பிச்சேன். குடும்ப கஷ்டம் வேற ஒரு பக்கம். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது, யூடியூப் தளத்தில் வீடியோ போட்ட காசு தருவாங்க னு நண்பர்கள் சொன்னாங்க. அதனால ஆரமிச்சேன். யூடியூப் தான் என்னோட கனவு, லட்சியம் என்றெல்லாம் கிடையாது. சொல்லப்போனா யூடியூப் விட facebook-ல் தான் அதிகம் சம்பாதிக்கிறேன் என உண்மையை சுவாரசியமாக சொல்கிறார். 

எப்போ வீடியோ பண்ண ஸ்டார்ட் பண்ணீங்க? எப்போ சம்பாதிக்க ஆரமிச்சிங்க?
"2019, ஜனவரி மாசம் ஸ்டார்ட் பண்ணி, ஒரு வருடம் கழித்து 2020 பிப்ரவரி மாதம் தான் முதல் வருமானம் வந்தது. பெருசா ஒண்ணுமேயில்லை. ஒன்பிளஸ் போன், குட்டியா ஒரு ட்ரைபேட், ரூ.700-க்கு ஒரு மைக் அவ்ளோதான் நம்ம முதலீடு" என கூலாக பதில் அளித்தார். 

தனது அனுபவம் குறித்து இப்ராஹிம் கூறியது:
"எதுவுமே ஈஸியா கிடைப்பதில்லை. ஒரு வீடியோவை எடுப்பது என்பது எவ்ளவு கஷ்டம் தெரியுமா? வியூஸ் வராது, வீடியோ எடுக்கப் போற இடத்தில் அசிங்கப்படுத்திடுவாங்க, குடும்ப பிரச்சனை, உடல் ரீதியான தொல்லைகள் என ஒரு பெரிய லிஸ்டே போகும்… இது எனக்கு மட்டுமில்லை, யூடியூப் சேனலில் வீடியோவை பதிவேற்றும் அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை தான். ஒரு சின்ன வித்தியாசம், எனக்கு மட்டும் எல்லா பிரச்சனைகளும் ஒரு குரூப்பாகவே வரும்" என சிரித்தபடியே கூறினார்.

உங்கள் பயணத்தில் மறக்கமுடியாத சம்பவம் எது?
"ஹோட்டலுக்கு ஒரு முறை உணவு குறித்து விமர்சனம் செய்ய சென்றோம். "அங்கிருந்து உணவு வகைகளை குறித்து பேசியப்படி வீடியோ பதிவு பண்ணிட்டு இருந்தேன். அதைபார்த்த கடைக்காரர்கள் என்னிடம் சண்டைக்கு வந்துட்டாங்க. நீயெல்லாம் எதுக்கு வீடியோ பண்ணறேனு கேமராவ தூக்கிக்கிட்டு வறீங்க? இர்பான் மாதிரி வீடியோ பண்ணுங்க-னு. உனக்கெல்லாம் எதுக்கு யூடியுப் சேனல் என தாறுமாறா சங்கடப்படும்படி பேசிவிட்டார். ரொம்ப அசிங்கம் ஆயிடிச்சு. நான் அழ ஆரம்பிச்சிட்டேன். என்கூட இருந்த என் நண்பன், அழாதீங்க.. இங்க இருக்குற 20 பேர் தவிர வேற யாரும் பாக்கல மச்சான்.. அஷோக், இந்த நாளை நீ டைரியில் எழுதி வெச்சிகோ...  ஒரு நாள்.. அப்படி இப்படின்னு சினிமா டைலாக் பேசி என்ன சிரிக்க வெச்சி, நல்ல கடையில சாப்பாடு வாங்கிக்கொடுத்து சமாதானம் செய்தான். இன்று அதே ஹோட்டல் கடைக்காரர், வீடியோ பண்ணுங்க ரூ.35,000 பணம் தருகிறோம்" என்று போன் பண்ணி அழைக்கிறார். நல்ல சாப்பாடு மக்களுக்கு கொடுங்க, காசே இல்லாம வீடியோ பண்றேன் சொல்லிடேன்" என வலிகளை வார்த்தைகளாகக் கூறினார்.

உங்களை ரொம்ப நெகிழ வைத்த சம்பவம் எது?
’ "கிருபை ஸ்வீட்ஸ்" என்ற ஒரு சின்ன கடை சென்னை பாரிஸ் கார்னரில் உள்ளது. இங்க பால்கோவா வேற லெவெலில் இருக்கும். ஆனால் மக்கள் நிறைய பேருக்கு அதுப்பற்றி தெரியாது. நான் அந்த கடையை வீடியோ பதிவு செய்து நம்ம சானலில் போட்ட பிறகு, மேலும் இரண்டு கடைகளை திறந்துவிட்டார் அந்த கடை உரிமையாளர்’ என்றார். 

"தம்பி, 200 ரூபாய்க்கு சட்ட போட்ட நான், உங்களால இன்னைக்கு 2000 ரூபாய்-க்கு சட்ட போடுறேன்" உரிமையாளர் சந்தோசமா சொல்லும்போது மனம் திருப்தியாக இருக்கும். அது மாதிரி நிறைய கடைகள், வியாபாரிகள் நம்மால், பலர் முன்னேறி இருக்காங்க, என்றார்.

எனக்கு வாழ்க்கை கொடுத்தது என்னுடைய பார்வையாளர்கள்:
சம்பாதிக்கணும்னு சானல் ஆரமிச்ச எனக்கு வாழ்க்கைய கொடுத்தது என்னோட வியூவர்ஸ் தான். அவுங்களுக்காக எங்க வேனும்னாலும் போக ரெடி.

முக்கியாமா Facebook தான் எனக்கு மறுவாழ்வு கொடுத்ததுனு சொல்லலாம். இன்று எனக்கு வரும் பிசினஸ் Facebook மூலம்தான் அதிகம். யூடியூபில் ஸ்டாராக இருக்கும் பல யூடியூபர்கள் கூட, Facebook-ல் நம்மைவிட குறைவான பாலோவர்ஸ் தான் மற்றும் நம்மை விட குறைவான வருமானன்மே ஈட்டுகிறார்கள். Facebook-ல் தமிழ்நாடு அளவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட சேனல்களில் நம்ம சேனல் டாப் 5 இடத்தில் உள்ளது என நம்பிக்கையாக கூறினார்.

வருங்கால யூடியூபர்களுக்கு ஏதாவது அட்வைஸ்?
இத அட்வைஸ்-னு எடுத்துக்க வேண்டாம், ஒரு சகோதரனா சொல்றேன். இங்க எல்லாருக்கும் சக்ஸஸ் இருக்கு. நோக்கம் எதுவேண்டுமானாலும் இருக்கலாம் தப்பே இல்ல, ஆனா நேரத்தை ஒதுக்கி நிதானமா பண்ணுங்க. அவ்வளவு தான்..

அப்டியே என்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என வீடியோவில் கூறுவது போல தனது இன்டர்வியூ-ஐ முடித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News