நடிகை பிரியங்கா தனது ஆதரவு மற்றும் சமூக காரணங்களுக்கான பங்களிப்பை வழங்கி வருவதால் ஹார்மனி அறக்கட்டளையின் சார்பாக அவருக்கு அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்படுகிறது.
அகதிகளின் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளுக்காக போராடுவது, தேவையானவர்களுக்கு உதவிகளை செய்வது போன்ற சமூக நலனில் ஈடுபடும் யூனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக முதலில் ஏஞ்சலினா ஜோலி இருந்தார். தற்போது ஃக்ளோபல் சூப்பர் ஸ்டார் பிரியங்கா சோப்ரா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக உள்ளார்.
சமூக காரணங்களுக்காக பங்களிப்பு மற்றும் பொதுநலனில் ஈடுபட்டு வந்த பிரியங்காவுக்கு ஹார்மனி அறக்கட்டளை அவருக்கு விருது வழங்கியது. ஆனால், இந்த விருதினை அவரது தாயார் டாக்டர் மது சோப்ரா, பிரியங்கா சார்பாக பெற்றுக் கொண்டார்.
பிரியங்கா சோப்ராவின் தயார் மது சோப்ரா கூறியது,
பிரியங்காவுக்கு பதிலாக இந்த விருதினை பெறுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த விருதினை பணிவுடன் ஏற்று கொள்கிறேன். கருணை மற்றும் இரக்கம் கொண்ட ஒரு குழந்தையை பெற்றதற்காக நான் பெருமை கொள்கிறேன்.
நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு பெறுவீர்கள் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கிறாள். அவள் ஒரு குழந்தையாக இருந்தபொழுதும், அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு இருக்கிறாள். அவள் பரேலியில் உள்ள பிரேம் நிவாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறாள்.
பிரியங்காவின் சேவையை அங்கீகரித்திருப்பதற்காக ஹார்மனி அறக்கட்டளைக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.