தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணை குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான அந்த விசாரணைக்குழு விரைவில் பேராசிரியையிடம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, போலீஸ் விசாரணை நடத்திவரும் நிலையில் ஆளுநரின் விசாரணை எதற்காக என ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்ப, அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கவே இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். இதை தொடர்ந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், முன் நிர்மலா தேவியை போலீஸ் ஆஜர்படுத்தியது.
இதனையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஏப்ரல் 28-ம் தேதி வரை அவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.