Kushi Movie: 23 ஆண்டுகளை கடந்தும் பசுமையான காதலாக மனதில் பதிந்த குஷி திரைப்படம்..!

23 Years of Kushi Movie: எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படம், 23 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களுக்கு பிடித்த காதல் கதையாக அனைவர் மனங்களிலும் இடம் பெற்றுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : May 19, 2023, 11:02 AM IST
  • எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படம் 23 ஆண்டுகளை கடந்துள்ளது.
  • விஜய்-ஜோதிகா நடித்த இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.
  • தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.
Kushi Movie: 23 ஆண்டுகளை கடந்தும் பசுமையான காதலாக மனதில் பதிந்த குஷி திரைப்படம்..! title=

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தில் தளபதி விஜய்,  ஜோதிகா, நிழல்கள் ரவி மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் நடித்த படம்தான் குஷி. இந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் கடந்துவிட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? 

இயக்குனர் எஸ்.ஜே சூர்யா

அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கிய கையோடு அடுத்த பெரிய ஹீரோவான விஜய்யை வைத்து குஷி படத்தினை இயக்கினார், எஸ்.ஜே.சூர்யா. இவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் அடல்ட் காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும் இவரின் திரைப்படத்திற்கான எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மவுசு குறையாது. நடிகர்கள் மற்ற  இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கும்  இயக்குனர் எஸ்.ஜே சூர்யாவின் படத்தில் நடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் தெரியும். அதற்கு முக்கிய  காரணம் ஷூட்டிங் ஸ்பாட்டில்  நடிகர்களிடம்   இருந்து நடிப்பை வாங்கும் முறைதான். இன்று முன்னணி கமர்ஷியல் இயக்குநராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்  கூட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என கூறப்படுகிறது.

பிற மொழிகளில் ரீ-மேக்:

தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குஷி திரைப்படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெவ்வேறு  நடிகர் நடிகைகளை வைத்து ரீ-மேக் செய்யப்பட்டது. குறிப்பாக தெலுங்கு பவன் கல்யாண்-பூமிகாவை வைத்து எடுக்கப்பட்ட படம், டோலிவுட் சினிமா ரசிகர்களின் அழகான காதல் படங்களின் லிஸ்டில் இன்றும் இடம் பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | புஷ்பா பட கெட்டப்பில் கலக்கும் திருப்பதி எம்பி! வைரலாகும் புகைப்படம்!

23 ஆண்டுகள் நிறைவு!

குஷி திரைப்படம் தற்போது 23 ஆண்டுகள் கடந்துவிட்டது.  கல்லூரிக்காலத்து காதல் கதையை எவ்வளவு நேரத்தியாகவும் நிதர்சனமாகவும் கூற முடியுமோ அதை அந்த அளவிற்கு அழகாக கூறியிருப்பார், எஸ்.ஜே சூர்யா. கதையின் அடிப்படை  நாயகனும் நாயகியும் காதலிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களுக்கு இடையேயான ஈகோ காரணமாக இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்த மறுக்கின்றனர். அந்த ஈகோவை விட்டொழித்து இறுதியில் எப்படி சேர்ந்தார்கள் என்பதே திரைப்படத்தின் க்ளைமேக்ஸ். இதில் வரும் உரையாடல் காட்சிகள் அனைத்தும் மிகவும் யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் எழுதப்பட்டிருக்கும்.

கதாப்பாத்திர வடிவமைப்பு:

விஜய்-ஜோதிகா என்ற நாயகன் நாயகியின் உண்மையான பெயரை மறந்து சிவா-ஜெனியாகவே நமது மனங்களில் பதியும் அளவிற்கு இருவரும் கதாப்பாத்திரத்துடன் ஒன்றி நடித்திருப்பர். இந்தத் திரைப்படத்தில் விஜய் ஜோதிகா ஆகியோரின் உடல் மொழி, உரையாடும் முறை முதற்கொண்டு புதுமையாக காண்பிக்கப்பட்டிருக்கும். முக்கியமாக மொட்டை மாடியில் சிவா மற்றும் ஜெனி சண்டை போடும் காட்சி இன்றுவரை இந்த படத்திற்கு ட்ரேட் மார்க் ஆக திகழ்கிறது. இது முழுக்க முழுக்க இயக்குனர் எஸ் ஜே சூர்யா வின் கைவண்ணம் மட்டுமே. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதுமையாகவே தெரிகிறது. இந்த படம் போலவே 2000ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான பிரியமானவளே, கண்ணுக்குள் நிலவு ஆகிய படங்களும் மெகா ஹிட் அடித்தன. 

23 Year Of Kushi Movie

தூள் கிளப்பிய தேவா:

பின்னணி பாடகராகவும், இசைக்கலைஞராகவும் வலம் வரும் தேவா, குஷி படத்திற்கு இசையமைத்திருந்தார். ‘வின்டேஜ்’ தேவா என பெயர் பெற்றிருந்த தேவா, இந்த படத்தின் மூலம் அன்றைய இளம் தலைமுறையினரை தனது இசையால் மயங்க வைத்து ‘ட்ரெண்டிங்’ தேவாவாக மாறினார். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் பெரிய ஹிட். குறிப்பாக ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா..’ பாடல் இன்றைய இளசுகளையும் சிலுசிலுக்க வைக்கும். மெலடியிலும் காதல்-காமம் கலந்த பாடலை தர முடியும் என்பதை உணர்த்தியவர் நம்ப தேவா சார்தான். அது மட்டுமன்றி, படத்தில் ஹீரோ-ஹீரோயின் முதன்முறை சந்தித்துக்கொள்ளும் போது ஒரு பி.ஜி.எம் ஒலிக்கும். அதிலிருந்து நமக்கு குஷி படம் என்றாலே அந்த இசைதான் நினைவிற்கு வரும். இப்பாே உங்களுக்கும் அந்த இசை ஞாபகம் வந்ததுதானே? 
எளிமையான காதல் கதையாக இருந்தாலும் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தின் நினைவுகளை ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Leo: லியோ படத்தில் தளபதியின் தந்தையாக சஞ்சய் தத்? கசிந்தது லோகியின் மாஸ்டர் ப்ளான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News