உட்தா பஞ்சாப் படத்துக்கு கட் கொடுத்த தணிக்கை வாரியத்துக்கு மும்பை உயர்நீதி மன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர் நடித்த படம் ‘உட்தா பஞ்சாப்'. போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கொண்ட இந்த படத்தை அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரித்து உள்ளனர். இந்த படம் வரும் 17-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
‘உட்தா பஞ்சாப்' படத்தை தணிக்கை செய்ய சினிமா தணிக்கை குழுக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டது. சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. மேலும் 89 இடங்களில் கட் செய்து மாற்றம் செய்யுமாறு பரிந்துரை அளித்தது. அத்துடன் படத்தின் தலைப்பில் ‘பஞ்சாப்' பெயர் இடம் பெறுவதற்கும் கண்டனம் தெரிவித்தது. இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி தர்மாதிகாரி கூறியதாவது: 89 இடங்களை வெட்டி நீக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை கூறும்படி மத்திய தணிக்கை குழுவிற்கு உத்தரவிட்டார். மேலும் அவர் இதுவரை திரைப்படங்களில் போதை பழக்கம் பற்றி காட்டப்படவில்லையா? சிலர் இதை மோசமாக சித்தரிக்கலாம், சிலர் கலைநயத்தோடு சித்தரிக்கலாம். ஆனால் இது எப்படி ஒரு மாநிலத்தை அவமதிப்பதாக ஆகும்? புற்றுநோய் அதிகமாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மோகா மாவட்டத்தை பற்றி ஒரு படம் உள்ளது. அது அந்த நகரத்தை இழிவு படுத்தவில்லை மாறாக அந்த பிரச்சினையின் தீவிரத்தை பற்றி பேசுகிறது என்று தெரிவித்தார்.