இளையராஜா பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி.பி

இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது என்று பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். 

Last Updated : Mar 19, 2017, 02:02 PM IST
இளையராஜா பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி.பி title=

லாஸ் ஏஞ்சல்ஸ்: இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது என்று பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். 

இது குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:- 

என்னுடைய ரசிகர்களுக்கு வணக்கம். கடந்த வார இறுதியில் சியாட்டிலிலும், லாச் ஏஞ்சல்ஸிலும் நடந்த இசைக்கச்சேரிகளுக்கு வந்தவர்களுக்கும், நிகழச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், என்னுடைய மகன் சரண், பாடகி சித்ரா மற்றும் இசைக் கச்சேரி ஓருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அதாவது இளையராஜா இசையமைத்த பாடல்களை அவருடைய அனுமதி இல்லாமல் இனி பாடக் கூடாது. மீறி பாடினால் அபராதத்தொகையை சட்டப்படி கொடுக்க வேண்டியிருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எனக்கு இந்த சட்டத் திட்டஙகள் மீது சரியான புரிதல் இல்லை.

எனது மகன் சரண் சர்வதேச அளவில் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து, அதற்கு எஸ்.பி.பி.50 என்று பெயர் வைத்து டொரண்டோவில் தொடங்கினோம். இதனைத்தொடர்ந்து ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் இசைக் கச்சேரியை நாங்கள் நடத்திவருகிறோம்.

ஆனால் அப்போதெல்லாம் வராத நோட்டீஸ், இப்போது வந்துள்ளது என்பது தான் எனக்கு புரியவில்லை. இது தான் சட்டம் என்றால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் .

எனவே இந்த சூழலில், இனிமேல் நானும், எங்கள் குழுவினரும் இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை இசைக்கச்சேரியில் பாட மாட்டோம். ஆனால் கச்சேரி நடக்க வேண்டும். கடவுளின் அருளால் இளையராஜா தவிர, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை நான் பாடியுள்ளேன்.

அந்த பாடல்களை இனிவரும் இசைக்கச்சேரிகளில் நான் பாடுவேன். இனிவரும் இசைக் கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

உங்கள் அனைவரிடமும் என்னுடைய ஒரே கோரிக்கை என்னவென்றால் இது குறித்து எந்த விவாதமோ, கருத்தோ கூறவேண்டாம். 

Trending News