தேசிய விருது பெற்ற பேட்மேன் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் என கதை கரு நாயாகன் அருணாச்சலம் முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெண்களுக்கான மலிவு விலை சுகாதார பட்டை (cheap sanitary pads), உருவாக்கிய தமிழர் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை பற்றி பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்மேன்.
இதில், கோயம்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த சமூக படத்திற்கான தேசிய விருதை இப்படம் வென்றது.
இந்நிலையில், இது குறித்து அருணாச்சாலம் முருகானந்தம் தெரிவிக்கையில்., "பேட்மேன் திரைப்படம் தேசிய விருது வென்றது மிகுந்த மகிழ்ச்சி, பேட்மேன் படம் தமிழ் மொழியில் எடுக்கப்படும்போது அதில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய திரைப்பட விருதுகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இந்தி திரைப்படங்கள் 14 தேசிய விருதுகளையும், கன்னட திரைப்படங்கள் 10 விருதுகளையும் பெற்றன. மலையாள, தெலுங்கு படங்களுக்கு தலா 7 விருதுகள் கிடைத்தன. மராத்தி மொழி படங்கள் 6 விருதுகளையும், குஜராத்தி படங்கள் 3 விருதுகளையும் பெற்றன. தமிழுக்கு ஒரு விருதை தவிர வேறு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.