இரு தலித் சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் புறப்படும் போலீஸ் அதிகாரியின் கதையே நெஞ்சுக்கு நீதி.
பொள்ளாச்சியில் ஏ.எஸ்.பியாகப் பொறுப்பேற்கிறார் விஜயராகவன் (உதயநிதி). வெளிநாட்டில் படித்து வளர்ந்து இந்தியாவில் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரியும் அவருக்கு சாதிய அடுக்குகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. அந்த ஊரில் இரு தலித் சிறுமிகள் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். மரத்தில் தூக்கில் தொங்கியபடி அவர்களின் சடலங்கள் கிடைக்கின்றன. ஆனால், உண்மையான பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கச் செய்யாமல் ஆதிக்க சாதியினர் அரசியல் செய்கின்றனர். உடன் பணிபுரியும் காவலர்களும் விசாரணையை முடுக்கிவிடாமல் ஒத்துழைக்க மறுக்கின்றனர். இச்சூழலில் ஏ.எஸ்.பி. விஜயராகவன் என்ன செய்கிறார், மர்ம மரணத்துக்கான விடையைத் தேடிக் கண்டுபிடித்தாரா, காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க முடிந்ததா, சாதிய அடுக்குகளில் உள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
ஆர்ட்டிகிள் 15 இந்திப் படத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல் உணர்வுகளை அப்படியே கடத்திய விதத்தில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் வெற்றி பெற்றுள்ளார். வருங்கால அரசியலில் ஆதாயத்துக்காக நடிகரைத் தூக்கி நிறுத்தாமல், சாகச நாயக பிம்பத்தைக் கட்டமைக்காமல் படைப்புக்கு நேர்மையுடன் இருந்த அவரைப் பாராட்டலாம்.
மேலும் படிக்க | ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைக் கண்டுகளித்த முதலமைச்சர்- வைரல் புகைப்படங்கள்!
உதயநிதிக்கு இது 12-வது படம். திரைத்துறைக்கு வந்த 10 ஆண்டுகளில் சமூக நீதி பேசும் ஒரு படத்தில் கச்சிதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். உடல்மொழி, வசனம், பார்வை என அனைத்திலும் நல்ல நடிகனுக்கான அடையாளங்களைக் கொடுத்து தடம் பதிக்கிறார். மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ படங்களில் வெளிப்படுத்திய நடிப்பைக் காட்டிலும் இதில் முன்னேறியுள்ளார்.
தான்யா ரவிச்சந்திரன் படத்துக்குப் பக்கபலம். வழக்கமான நாயகியாக இல்லாமல் நாயகனுக்கு வழிகாட்டும், அறிவுறுத்தும் நாயகியாகச் சித்தரித்திருப்பது செம்ம. சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு ஆகிய இருவரும் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளனர். ஆரி அர்ஜுனன் போராளிக்குரிய பாத்திர வார்ப்பில் எந்தக் குறையுமில்லாமல் நடித்துள்ளார். ராட்சசன் சரவணன், ஷிவானி ராஜசேகர், ரமேஷ் திலக், மயில்சாமி ஆகியோர் கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கிராமச் சூழலின் இருவேறு பரிமாணங்களைக் கண்களுக்குள் கடத்துகிறது. திபு நைனன் தாமஸ் இசையில் யுகபாரதியின் செவக்காட்டு, எங்கே நீதி எனும் இரு பாடல்களும் படத்தின் கதைக்கு அடர்த்தியைக் கூட்டுகின்றன. பின்னணி இசை உறுத்தல் இல்லாமல் கதைக்கு நெருக்கமாகப் பயணிக்க உதவுகிறது. ரூபனின் எடிட்டிங் நேர்த்திக்கான பளிச் உதாரணம். வசனங்கள் படத்துக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.
ஆர்ட்டிகிள் 15 படத்தையே பெரும்பான்மையாகத் தழுவி எடுக்கப்பட்டாலும் நாயகியை தலித் பெண்ணாகவோ, களச் செயற்பாட்டாளராகவோ சித்தரித்திருந்தால் இன்னும் நெருக்கமான உணர்வைக் கொடுத்திருக்கும். ஆரி அர்ஜுனன் கதாபாத்திரத்தை அப்படி ஒரு முடிவுடன் விட்டதைத் தவிர்த்திருக்கலாம். பொது வாழ்க்கையில் அப்படி ஒரு ரிஸ்க் எடுப்பவர்களுக்கான முடிவு இப்படித்தான் அமையும் என்ற எதிர்மறை விளைவுக்கான தோற்றமாக அமைந்துவிடுகிறது.
மலம் அள்ளும் மனிதர்களின் துயரம், தலித் பெண் சமைத்தால் அதைச் சாப்பிடாமல் குப்பையில் கொட்டும் ஆதிக்க சாதியினரின் மனோபாவம், இந்தித் திணிப்பு, இருமொழிக் கொள்கை, அம்பேத்கரை இன்னும் சாதி சங்கத் தலைவராகவே பார்ப்பது, இட ஒதுக்கீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுவது ஆகியவற்றைப் பதிவு செய்து கேள்விக்குட்படுத்தும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், , நேர்மையாகப் பணிபுரியும் மருத்துவருக்கு அனிதா என்று பெயர் சூட்டியிருப்பதன் மூலம் தன் சமூக அக்கறையைப் பதிவு செய்துள்ளார்.
சாதிய அடுக்குகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், அதில் நாமும் ஒரு புள்ளியாய் இணைந்து சமத்துவம் வளர்க்கவும் இந்த நெஞ்சுக்கு நீதி உதவும். உங்கள் மனசாட்சி உங்களை உலுக்கி எடுக்கும். சமத்துவ சமுதாயம் வளர வழிவகுக்கும்.
மேலும் படிக்க | நெஞ்சுக்கு நீதி டீசர் ரிலீஸ் - உண்மைச் சம்பவத்தின் பின்னணி?
வீடியோ வடிவில் காண:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR