தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான
மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.
உலக முழுவதும் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் எப்படி கொண்டாடப்படுகிறது?
பழனியில் (இந்தியா) தைப்பூசம்:-
பழனி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருவார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுவது இங்கு ஐதீகம்.
இங்கு பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுப்பது வழக்கம். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன.
வடலூரில் (இந்தியா) தைப்பூசம்
கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதிகாலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறும். வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
மலேசியாவில் தைப்பூசம்
மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருவது ஐதீகம். |
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. |
மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. |
சிங்கப்பூரில் தைப்பூசம்
சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
மொரீஷியசில் தைப்பூசம்
சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.
ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்
இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள்.