ஏ.சி. பிரிஜ் உள்ளிட்ட 19 பொருட்கள் மீதான சுங்க வரி உயர்வு; அத்திவாசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை...!
ரூபாய் மதிப்பை அதிகரிக்கும் வகையில், 19 பொருட்களுக்கான சுங்கவரி நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2 புள்ளி 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை சரி செய்வதற்கு, இறக்குமதியை குறைக்கும் விதத்தில் அத்தியாவசிய தேவையற்ற 19 பொருட்களுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏசி, வீட்டுப் பயன்பாட்டுக்கான ஃபிரிட்ஜ், 10 கிலோவுக்கு குறைவான அளவு கொண்ட சலவை எந்திரம் ஆகியவற்றுக்கான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி, காலணிகள், கார் டயர், ஆகியவற்றுக்கான சுங்க வரி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருளுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்த நிலையில், 5 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2017 - 2018 நிதி ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த 19 பொருட்களின் மதிப்பு 86 ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி சுங்க வரிஉயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.