நாளை சூரிய கிரகணத்தை ஒட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு 6 கிரகங்கள் ஒன்று சேருகிறது.
நாளை சூரிய கிரகணம் நிகழ்வதையொட்டி, ராசியில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் (27 ஆம் தேதி வரை) சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் மற்றும் கேது ஆகிய 6 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையை பெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு நெருப்பு வளையம் போன்று தோன்றும் முழு சூரிய கிரகணம் தெரியவுள்ளது. நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் முழுமையாக பார்க்க முடியும். மற்ற பகுதிகளில் பகுதி சூரிய கிரணகன காட்சியை காணலாம்.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது காலை 8:00 மணி முதல் 11:16 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது.
இந்த சூரிய கிரகணத்தை குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் பார்க்க முடியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு 6 கிரகங்கள் ஒன்று சேருகிறது. இதன் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்து ஜோதிடர்கள் பலன்களை கணித்து வெளியிட்டு வருகிறார்கள்.
6 கிரகங்கள் ஒன்று சேருவது போல கடந்த 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ராகு தவிர மற்ற 8 கிரகங்கள் மகரராசியில் ஒன்று சேர்ந்தன. இப்போது 6 கிரக சேர்க்கையால் நடக்கப்போவது என்ன என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும்.