நேற்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகளில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக அமோகமான வெற்றி பெற்றுது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 325 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலமாக, அக்கட்சி ஆட்சியமைப்பதும் உறுதியாகியுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி 54 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜகவே முன்னிலை பெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே போட்டியிட்டு வெற்றி கண்டது பாரதிய ஜனதா கட்சி. இந்நிலையில், இன்று டெல்லியில் பா.ஜ.க-வின் தலைமையகத்தில், அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி, இரண்டு மாநிலங்களுக்கும் முதல்வர்களை தேர்ந்தெடுப்பர் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் நிர்வாகிகளும் கலந்து கொள்வர் என்று தகவல்கள் கூறுகின்றன.