டெல்லி: 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. என்டிஏ தலைவராக பிரதமாக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து குடியரசு தலைவரும் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க்க உள்ளதால், அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும், எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்வீர்களா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நிருபர்களிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், நான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறேன். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். இதுகுறித்து மற்ற மாநில முதல்வர்களுடனும் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளையும், பாஜக கட்சி 18 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த மாநிலத்தில் முதன் முறையாக அதிக மக்களவை தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.