'சட்டப்படி நடைபெறும் கலப்பு திருமணங்களுக்கு எதிராக இந்த நீதிமன்றம் ஒருபோதும் செயல்படாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் மதம் மாறி இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 33 வயது முஸ்லிம் இளைஞர், அதேப்பகுதியை சேர்ந்த 22 வயது இந்து பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் இந்து மதத்திற்கு மாறி அந்த பெண்ணை, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை எதிர்த்த அந்த பெண்ணின் தந்தை, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக, இது போல மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் மோசடிகள் நிறைய நடைப்பெற்று வருகிறது. என் பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் இளைஞர், மீண்டும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார். எனவே, இந்த திருமணத்தை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், 'காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, சேர்ந்து வாழ தடை விதிக்க முடியாது' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, பெண்ணின் தந்தை உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள், 'சட்டப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதற்கு எதிராக இந்த நீதிமன்றம் செயல்படாது' என அதிரடியாக தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை, வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.