மூட நம்பிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் : நாடு முழுவதும் வலுக்கும் குரல்கள்

Human Sacrifice : கேரளாவில் பணக்காரர்கள் ஆவதற்காக இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற மூட நம்பிக்கைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.   

Written by - Chithira Rekha | Last Updated : Oct 13, 2022, 03:22 PM IST
  • நாட்டையே உலுக்கிய கேரள நரபலி
  • மூட நம்பிக்கைக்கு எதிராகச் சட்டம் இயற்ற கோரிக்கை
  • மகாராஷ்டிரா, கர்நாடகாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது
மூட நம்பிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் :  நாடு முழுவதும் வலுக்கும் குரல்கள் title=

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தின் இலந்தூரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர், பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்களை நரபலி கொடுத்தனர். மந்திரவாதி என அறிமுகமாகிய ரஷீத் என்கிற முகமது ஷபியின் பேச்சை பகவல் சிங்கும், அவரது மனைவியும் முழுமையாக நம்பி இதனை செய்துள்ளனர். 

இந்த நரபலி குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல்கள், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன. பலியான இருவரின் உடல்களும் துண்டு துண்டாக வெட்டப்படுவதற்கு முன்பே தலை துண்டிக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. பகவல் சிங்கின் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்ட இருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Kerala human sacrifice

இந்தக் கொலைகள் குறித்து அதிர்ச்சி தெரிவிதுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே இதுபோன்ற குற்றங்களைச் செய்ய முடியும் என அவர் சாடியுள்ளார். 

அடிப்படை உரிமை மீறல்
சூனியம் போன்ற மூடநம்பிக்கை செயல்கள் இந்திய அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 21 வது பிரிவுகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகின்றன.

மேலும், மூட நம்பிக்கைகள் இந்தியா கையொப்பமிட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்களின் பல விதிகளையும் மீறுகின்றன. 1948-ம் ஆண்டின் சர்வதே மனித உரிமைகள் பிரகடனம், 1966-ம் ஆண்டின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை, 1979-ம் ஆண்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாடு ஆகிய ஒப்பந்தங்களை மூட நம்பிக்கைகள் மீறுகின்றன.இருப்பினும், மூட நம்பிக்கைகளைத் தடுக்க தேசிய அளவில் சட்டம் கொண்டு வரப்படவில்லை. 

கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கேரளா மூடநம்பிக்கைகளுக்கு எதிரான வரைவு மசோதாவைக் கொண்டு வந்தது. 2014-ம் ஆண்டு, கேரளாவின் அப்போதைய காவல்துறை புலனாய்வு கூடுதல் இயக்குநர் ஹேமச்சந்திரன் இந்த வரைவு மசோதாவை அரசிடம் சமர்ப்பித்தார். எனினும் அந்த மசோதா இன்னும் சட்டமாக்கப்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு கேரள சட்ட சீர்திருத்த ஆணையமும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான வரைவு மசோதாவை உருவாக்கி அரசிடம் சமர்ப்பித்தது. இந்த மசோதாவின் படி,  குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ 50,000 வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதுவும் சட்டமாக்கப்படவில்லை. 

மேலும் படிக்க | பண கஷ்டத்தை போக்க நரபலி... 2 பெண்களை கொடூரமாக கொன்ற கேரள தம்பதி கைது!

இந்நிலையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா

2013-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில அரசு நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற மூட நம்பிக்கைகள் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி,  சூனியம், நரபலி, நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மந்திரம் பயன்படுத்துதல் மற்றும் மக்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறைகளில் ஈடுபடுவது சட்டவிரோதமானது ஆகும். மேலும், குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. .

குற்றவாளியின் பெயர், வசிக்கும் இடம் மற்றும் குற்றம் நடந்த இடம் உள்ளிட்ட விவரங்களை உள்ளூர் செய்தித்தாள்களில் காவல்துறை வெளியிட வேண்டும் எனவும் இச்சட்டம் கூறுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகியும், இன்னும் அமல்படுத்தவில்லை என மகாராஷ்டிர அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி அம்மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. 

மூடநம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கர், கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் வலதுசாரி அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டாலும் அதற்கான விதிகள் முறையாக வகுக்கப்படவில்லை எனவும், மூட நம்பிக்கைகள் பெருகியுள்ளதால், அதற்கு எதிரான விதிகளை வகுப்பது அவசியம் எனவும், நரேந்திர தபோல்கரின் மகன் ஹமீத் வலியுறுத்தியுள்ளார். 

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 2017-ம் ஆண்டு மூட நம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டது.  மூடநம்பிக்கையினால் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் சூனியம் உள்ளிட்ட 16 செயல்களை இச்சட்டம் தடை செய்கிறது. அப்போதைய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் ஆட்சியின் கீழ், மாநில சட்டமன்றத்தில் மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது."இந்துகளுக்கு எதிரானது" என பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இச்சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் 2018-ம் ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வந்ததை அடுத்து, இச்சட்டம் அமலாகவில்லை. இத்தேர்தலின் முடிவில் காங்கிரஸ் -மதசார்பற்ற ஜனதா தள ஆட்சி அமைந்தாலும், ஓராண்டிலேயே ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்தது. பின்னர் 2020-ம் ஆண்டு, பாஜகவே இச்சட்டத்தை அமலாக்கியது. 

மூடநம்பிக்கைகளுக்கும் கல்வியறிவிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு, சித்தூரைச் சேர்ந்த தம்பதி, தங்களது மகள்கள் உயிருடன் மீண்டு வருவார்கள் என அவர்களை நரபலி கொடுத்ததை நாம் மறந்திருக்க இயலாது. மீண்டும் இது போன்ற உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசே புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News