ரயில்வே துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்து புகார் அளிக்க ஏதுவாக நாடுமுழுவதும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது இந்திய ரயில்வே துறை!
ரயில்வே துறையில் நிகழும் ஊழல்கள் குறித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களி தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பிரதான ரயில் நிலையங்களில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளது. வடக்கு ரயில்வேயினை பொருத்தவரையில் புதுடெல்லி ரயில் நிலையத்திலும், நிஜாமுதின் ரயில் நிலையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வு துறையின் மூலம், ஊழல் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. 'Eradicate Corruption-Build a New India' என்னும் பெயரில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம் ஊழலற்ற இந்தியாவினை உருவாக்க பல்வேறு செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில் நிலையங்களில் சிறப்பு புகார் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய புலனாய்வு துறையின் அறிக்கை படி கடந்த ஏப்ரல் மாதம், இந்திய ரயில்வே துறையில் அதிகப்படியான லஞ்ச முறைகேடு நடப்பதாக புகார் வந்துள்ளது. இந்த புகார்களினை அடுத்து இந்திய ரயில்வே துறையில் நிகழும் லஞ்ச புகார்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய புலனாய்வு துறையால் தாக்கல் செய்யப்பட்ட புகார்களில் 12,089 புகார்கள் ரெயில்வே ஊழியர்களுக்கு எதிராக பதிவாகியுள்ளது. இதில் 9,575 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 2,514 புகார்கள் நிலுவையில் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.