மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!!
டெல்லி: மேகதாதுவில் அணை கட்ட கூடாது என காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது.
மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார். காவிரி நீர் திறப்பு, பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் தற்போது நிலுவையில் இருக்க கூடிய தண்ணீர் தொடர்பான விஷயம் பேசப்பட்ட நிலையில். மேகதாதுவில் அணை கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றனர்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் செயல்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அதை விவாதப் பொருளாகவே எடுத்துக் கொள்ளக்கூடாது என தமிழகம் வலியுறுத்தியது. தொடர்ந்து காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம், அக்குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர், உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.