மோடியை திருடர் என நீதிமன்றமே தெரிவித்து விட்டதாகக் கூறிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஃபேல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதன் மூலம், காவலாளி எனக் கூறிக் கொள்ளும் மோடி ஒரு திருடர் என நீதிமன்றம் கூறிவிட்டதாக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி பாஜக எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ராகுல்காந்தி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராகுல் காந்தி தரப்பில் நேற்று வருத்தம் தெரிவிக்கப்பட்டதோடு, விளக்கமும் அளிக்கப்பட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராகுல் காந்தி சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வருத்தம் தெரிவித்தார். ஆனால் ராகுல் காந்தியின் விளக்கத்தில் திருப்தி இல்லை என கூறிய நீதிபதிகள், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் ரபேல் மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வரும் போது, ராகுல் காந்திக்கு எதிரான வழக்கையும் விசாரிக்க பட்டியலிடுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று மறு சீராய்வு மனுவோடு, ராகுல் காந்தி மீதான வழக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.