புதுடெல்லி: ப.சிதம்பரத்தை நாளை (ஆகஸ்ட் 29) வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மேலும் அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் மனு மீதனா விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.
அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வு முன்பு நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அப்பொழுது அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார். அதேபோல நேற்று ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.
அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்து வந்த நிலையில், கோர்ட்டின் நேரம் முடிவடைந்ததால், நாளை (ஆகஸ்ட் 29) காலை 11 மணிக்கு அமலாக்கத்துறை சார்பாக தனது வாதங்களைத் தொடர மேத்தாவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பி சிதம்பரத்தை கைது செய்ய தடையை வியாழக்கிழமை வரை உச்சநீதிமன்றம் நீட்டித்தது.