சமூக வலைதளங்களை கண்காணிக்கும் மையத்தை உருவாக்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
சமூக வலைதளங்களை கண்காணிக்கும் மையத்தை உருவாக்கி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஆன்லைன் தகவல்கள் சேகரிப்பதன் மூலம் மக்களை கண்காணிக்க இயலுமா என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சமூக ஊடகங்களை கண்காணிக்கும் மையத்தை உருவாக்கி பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்களை கண்காணிக்கும் மென்பொருள் உருவாக்கித் தரும் பணிக்கு மத்திய அரசு டெண்டர் அறிவித்து இருந்தது. இதற்கு எதிரப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த MLA மவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பொதுமக்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உள்ளிட்டவற்றின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டினை கண்காணிப்பின் கீழ் கொண்டுவர மத்திய அரசு ஆசைப்படுவதை போல் தோற்றம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த கேள்விகள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது!